ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர் இசான் கிஸன் இரட்டை சதம் அடித்து சாதனை..

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர் இசான் கிஸன் இரட்டை சதம் அடித்து சாதனை..
X

இரட்டை சதம் அடித்த மகிழ்ச்சியில் இசான் கிஸன்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் இசான் கிஸன் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அளித்து சாதனை படைத்தார்.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியை தழுவி தொடரை இழந்தது. இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி வங்கதேசம் சிட்டாங்நகரில் உள்ள ஜாஹீர் அகமது சௌத்ரி மைதானத்தில் நடைபெற்றது.

இசான் கிஸன் இரட்டை சதம்:


தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவனும், இளம் வீரர் இசான் கிஸனும் களம் இறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதலே அதிரடியாக ஆடிய இசான் கிஸன் பவுண்டரி மற்றும் சிக்ஸர் என அடுத்தடுத்து விளாசினார். அவர் 131 பந்துகளில் 210 ரன்கள் எடுத்திருந்த போது தஸ்கின் அகமது வீசிய பந்தில் லிட்டன் தாசிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

210 ரன்கள் எடுத்திருந்த இசான் கிஸன் அதில் 10 சிக்ஸர்களை விளாசி இருந்தார். மேலும், 24 பவுண்ட்ரிகளை விளாசி இருந்தார். இளம் வீரரான இசான் கிஸன் இரட்டை சதம் அடித்ததன் மூலம், உலக அளவில் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஏழாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேலும், இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்களில் நான்காவது வீரர் என்ற இடத்தையும் இசான் கிஸன் பிடித்துள்ளார். இதுதவிர, அவர் இரண்டு புதிய சாதனைகளை புரிந்துள்ளார். அதாவது, இதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் 138 பந்துகளில் இரட்டை சதம் அடித்திருந்தார்.

ஆனால் இளம் வீரரான இசான் கிஸன் 126 பந்துகளிலேயே 200 ரன்களை எடுத்து குறைந்த பந்துகளில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் புரிந்துள்ளார். இதற்கு முன்பு இளம் வயதில் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்தவர் பட்டியலில் இந்திய வீரர் ரோகித் சர்மா இடம்பெற்று இருந்தார்.

யார் இந்த இசான் கிஸன்?:

இளம் கிரிக்கெட் வீரரான இசான் கிஸன் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த 1998 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி பிறந்தார். இசான் பிரணவ் குமார் பாண்டே கிஸன் என்பது அவரது முழு பெயர். சுருக்கமாக இசான் கிஸன் என அழைக்கப்படுகிறார்.

24 வயதான இசான் கிஸன் இடதுகை பேட்டிங் பழக்கம் கொண்டவர் ஆவார். மேலும் விக்கெட் கீப்பர் பணியையும் செய்பவர். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் உள்ளூர் போட்டிகளில் ஜார்கண்ட் அணிக்காக ஆடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் குஜராத் லயன்ஸ் அணியிலும், 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணியிலும் விளையாடி வருகிறார்.

இசான் கிஸன் இதுவரை 39 முதல் தரப் போட்டிகளில் ஆடி உள்ளார். ஜார்கண்ட் அணிக்காக விளையாடும் இசான் கிஸன் கடந்த 2016 ஆம் ஆண்டு தில்லி அணிக்கு எதிராக நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை போட்டியில் 273 ரன்கள் எடுத்தார். அந்தத் தொடரில் 6 போட்டிகளில் 484 ரன்கள் எடுத்து ஜார்க்கண்ட் அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமை இசான் கிஸன் பெற்றார்.

இதுவரை 9 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள இசான் கிஸன் 467 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டியில் 21 ஆட்டங்களில் களம் இறங்கி 589 எடுத்துள்ளார். சர்வதேச போட்டியில் முதன் முதலாக கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் களம் இறங்கினார். அந்த போட்டியில் 32 பகுதிகளில் 56 ரன்கள் எடுத்து இசான் கிஸன் கலக்கினார்.

இந்த நிலையில், தற்போது வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 126 பந்துகளில் 200 ரன்களை எடுத்து அதிவேகத்தில் 200 ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிரீஸ் கெயில் 138 பந்துகளில் 200 எண்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையும் இசான் கிஸன் பெற்றுள்ளார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவக், ரோகித் சர்மா (இரண்டு முறை) ஆகியோர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

இதுவரை இரட்டை சதம் அடித்தவர்கள்:

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை இரட்டை சதம் அடித்த வீரர்கள் பற்றிய விவரங்களை பாப்போம். இந்திய வீரர் ரோகித் சர்மா அதிகபட்சமாக 264 ரன்கள் எடுத்து ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த தனி நபர் என்ற முறையில் முதலிடத்தில் உள்ளார்.

அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 264 ரன்கள் குவித்தார். அதற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் 237 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அடுத்து இந்திய வீரர் வீரேந்தர் சேவாக் 219 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் இந்தூர் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்த ரன்களை குவித்தார்.

அடுத்த இடத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயில் உள்ளார். அவர், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 215 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய வீரர் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் 209 ரன்கள் எடுத்திருந்தார்.

மேலும், இந்திய நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் கடந்த 2009 ஆம் ஆண்டு குவாலியரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார். தற்போது இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இசான் கிஸனும் இணைந்து உள்ளார்.

குவியும் வாழ்த்துகள்:

இளம் வயதில் இரட்டை சதம் அடித்துள்ள இசான் கிஸனுக்கு வாழ்த்து மழை குவிந்து கொண்டே இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், அற்புதமான தாக்குதல் ஆட்டம் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல, இசான் கிஸனை மேஜிக் பேபி என்று க்ருணால் பாண்டியாவும், தீயாக விளையாடினார் என சூர்யகுமார் யாதவும், பெருமைப்படக் கூடிய ஆட்டம் என ஹர்திக் பாண்டியாவும் இசான் கிஸனை புகழ்ந்து உள்ளனர்.

வீரேந்தர் சேவக் தனது டுவிட்டர் பக்கத்தில், இது சரியான பாதை என்றும் சிறப்பான ஆட்டத்தை வெளியிப்படுத்தி உள்ளார் இசான் கிஸன் என்றும் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் இசான் கிஸனுக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.

Tags

Next Story
கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் தார் சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!