இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி...

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி...
X

இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த ரோகித் சர்மா- சுப்மன் கில் ஜோடி.

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டிகளிலும், மூன்று டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை இந்திய அணி 2-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது.


அசாம் மாநிலம், கவுகாத்தி நகரில் உள்ள பிரசவரா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி மதியம் 1:30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸார் படேல், முகமது ஷமி, உம்ரன் மாலிக், முகமது சிராஜ், சாகல் ஆகியோர் இடம் பெற்றனர். கே.எல். ராகுல் விக்கெட் கீப்பர் பணியை கவனித்தார்.

இலங்கை அணி தரப்பில் கேப்டன் தசுன் சனகா, பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், அவிக்சா பெர்னான்டோ, தனஞ்செயா டி சில்வா, சரித் அசலங்கா, வனிந்த் கசரங்கா, சமக கருணரத்னே, துணிந்த் வெல்லகே, கசுன் ரஜிதா, தில்சன் மதுசனகா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களம் இறங்கினர்.

தொடக்கம் முதலே அவர்கள் இருவரும் அதிரடியாக ஆடத் தொடங்கினர். அணியின் ஸ்கோர் 143 ஆக இருந்தபோது, சுப்மன் கில் விக்கெட்டை பறி கொடுத்தார். அவர் 60 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த கேப்டன் ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களம் இறங்கிய விராட் கோலி- ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக ஆடினர்.

இருப்பினும், 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் தனது விக்கெட் பறி கொடுத்தார். தொடர்ந்து களம் இறங்கிய கே.எல். ராகுல் 39 ரன்களிலும், ஹார்திக் பாண்டியா 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர், 87 பந்துகளில் 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.


இந்த போட்டியில் அடித்த சதத்தின் மூலம் இந்திய மண்ணில் 20 சதங்கள் அடித்துள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார். மேலும், கடந்த போட்டியில் வங்கதேசம் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்த நிலையில், தொடர்ந்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி சதம் அடித்துள்ளார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் தரப்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தொடக்க முதலே சரிவை சந்திக்க தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரரான அவிக்சா பெர்னாண்டோ 5 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் முகமது சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த அசலங்காவும், நிசாங்காவும் ஓரளவு நிலைத்து ஆடினர். இருப்பினும் அசலங்கா 23 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் உம்ரன் மாலிக் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து, நிசாங்காவும், தனஞ்செய டி சில்வாவும் நிதானமாக ஆடினர். அந்த இணையை முகமது சமி பிரித்தார். அவரது பந்துவீச்சில் தனஞ்செய டி சில்வா 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

சிறப்பாக விளையாடி வந்த நிசாங்கா 72 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் உம்ரன் மாலிக் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து களம் இறங்கிய கசரங்கா 16 ரன்களிலும், துணித் வெல்லலகே ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். சமிகா கருணரத்னே 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இருப்பினும், இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா நிலைத்து ஆடி 108 ரன்கள் எடுத்தார்.

இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் ௮ விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் உம்ரன் மாலிக் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய- இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறுகிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil