சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்.. டி-20 தொடரை கைப்பற்றிய இந்தியா...
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட இந்திய வீரர்கள்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி-20 போட்டிகளில் விளையாடியது. கடந்த 3 ஆம் தேதி மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் வீரர் தீபக் ஹூடா சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த நிலையில் இரண்டாவது டி-20 போட்டி புணே மைதானத்தில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. மிகவும் பரபரப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளுடன் சம நிலையில் இருந்ததால் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் இருந்தன.
இந்த நிலையில் மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டி இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரராக இசான் கிஷனும், சுப்மன் கில்லும் களம் இறங்கினர். அதிரடி வீரரான இசான் கிஷன் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் தில்சன் மதுசனங்கா வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி மற்றும் சுப்மன் கில் இணை சிறப்பாக விளையாடியது. இருப்பினும் அணியின் ஸ்கோர் 52 ஆக இருந்தபோது 35 ரன்கள் எடுத்திருந்த ராகுல் திரிபாதி விக்கெட்டை பறி கொடுத்தார். அவர் 16 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பிறகு களம் இறங்கிய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சூர்யகுமார் யாதவ்- சுப்மன் கில் இணை சிறப்பாக விளையாடிய நிலையில் அணியின் ஸ்கோர் 163 ஆக இருந்தபோது 14.4 வது ஓவரில் அந்த ஜோடி பிரிந்தது. 36 பந்துகளில் 46 ரன் எடுத்திருந்தபோது சுப்மன் கில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஹார்த்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோர் தலா 4 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
ஆல்- ரவுண்டரான அக்ஸார் படேல் சிறப்பாக விளையாடி 9 பந்துகளில் 21 ரன் குவித்தார். அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளை சந்தித்து 112 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் 9 சிக்ஸர்களை பறக்க விட்டார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை குவித்தது. இலங்கை அணி தரப்பில் தில்சன் மதுசனகா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் . அந்த அணியின் தொடக்க வீரரான பதும் நிசங்கா 15 ரன்களிலும், குசல் மெண்டிஸ் 23 ரன்களிலும், அவிக்சா பெர்னாண்டா ஒரு ரன்னிலும், தனஞ்சியா டி சில்வா 22 ரன்களிலும், சரித் அசலங்கா 19 ரன்களிலும், கேப்டன் தசுன் சனகா 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலேயே விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், உம்ரன் மாரிக், சகல், ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இலங்கை அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதனால், இந்திய அணி 91 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இதனால், 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
51 பந்துகளில் 112 ரன்கள் குவித்த இந்திய அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அக்ஸார் படேல் தொடர் நாயகன் விருதை பெற்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu