நியூஸிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா...
நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹார்த்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக சுப்மன் கில்லும், இஸான் கிஷனும் களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் பிராக்வெல் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் இஸான் கிஷன் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாட்டியும் சுப்மன் கில்லும் சிறப்பாக விளையாடினர். 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திரிபாட்டி ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்னர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
அதன் பிறகு கேப்டன் ஹார்த்திக் பாண்டியாவும், சுப்மன் கில்லும் நிதானமாக ஆடினர். இருப்பினும் ஹார்த்திக் பாண்டியா 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து தீபக் ஹூடா களம் இறங்கி சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் சதம் அடித்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவிந்தது.
சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் 7 சிக்ஸர்கள் 12 பவுண்டரிகளை விளாசினார். நியூசிலாந்து அணி தரப்பில் பிராக்வெல், டிக்னர், சோதி, மிட்சேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். தொடர்ந்து, 20 ஓவர்களில் 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூஸ்லாந்து அணி களம் இறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரண்களிலே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். கேப்டன் ஹார்த்திக் பாண்டியாவும், அர்ஷித் சிங்கும் சிறப்பாக பந்துவீச்சு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தின. பின் ஆலன் மூன்று ரங்களிலும், கான்வே ஒரு ரன்னிலும், ஷாப்மேன் ரன் எடுக்காமலும், பிலிப்ஸ் 2 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
சாண்ட்னர் 13 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். டிக்னர் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். டேரியல் மிட்சேல் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து அணி 12.1 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 66 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்திய அணி தரப்பில் ஹார்த்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷித்சிங், உம்ரன் மாலிக், மாவி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி என்ற சாதனையை இந்த போட்டியில் இந்திய அணி புரிந்துள்ளது.
இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடி 126 ரன்கள் குவித்த சுப்மன் கில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக ஹார்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu