3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை...

3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை...
X

இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய பந்து வீச்சாளர் முகமது சிராஜை பாராட்டும் சக வீரர்கள்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்திய-இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் பீல்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர்.


தொடக்கம் முதலே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 95 ஆக இருந்தபோது ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து விராட் கோலி களம் இறங்கினார். சுப்மன் கில்- விராட் கோலி ஜோடி இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதற செய்தனர்.இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். விராட் கோலி-சுப்மன் கில் ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 131 ரன்களை குவித்தது. அணியின் ஸ்கோர் 226 ஆக இருந்தபோது 33.4 வது ஓவரில் சுப்மன் கில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். அவர் 97 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். அதில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் அடங்கும்.

தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் வந்தது முதல் அதிரடியாக ஆட தொடங்கினார். இருப்பினும், அவர் 32 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஒரு சிக்சர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். அதன்பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல். ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களிலே ஆட்டம் இழந்தனர். கே.எல். ராகுல் 7 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தது.

இருப்பினும், விராட் கோலி சிறப்பாக விளையாடி 110 பந்துகளில் 166 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். அதில் 8 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகள் அடங்கும் . 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்களை குவித்தது.


விராட் கோலி 166 ரன்களுடனும், அக்ஸார் படேல் இரண்டு ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் கசூன் ரஜிதா, லகிரு குமாரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சமிக்சா கருணரத்தினே ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது.

இலங்கை அணிக்கு தொடக்கமே கடும் அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரரான அவிக்சா பெர்னாண்டோ ஒரு ரன் எடுத்திருந்த நிலையிலும், நுவைந்து பெர்னாண்டோ 19 ரன்களிலும் முகமது சிராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். குசல் மெண்டிஸ் நான்கு ரன்களில் முகமது சமி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா ஓரளவு தாக்குப்பிடித்து 11 ரன்கள் எடுத்தார். இருப்பினும் அவர் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

அதன் பிறகு வனிந்து கசரங்கா ஒரு ரன்னிலும், சமிக்சா கருணரத்னே ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். துனித் வெல்லலகே மூன்று எண்களில் முகமது மிமி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த நிலையில் 22 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணியின் அஸ்கன் பண்டாரா களம் இறங்காததால் அவர் ஆப்சென்ட் ஹர்ட் முறையில் விக்கெட்டை இழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் முகமது சிராஜ் சிறப்பாக வந்து வீழ்ச்சி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சமி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களிலும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை விராட் கோலி கைப்பற்றினார்.

மொத்தம் உள்ள மூன்று ஒருநாள் போட்டியில் ஏற்கெனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இந்த வெற்றி மூலம் இந்திய அணி 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது. மேலும், மூன்று போட்டிகளை கொண்ட டி-20 போட்டிகளில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு