நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டி.. 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி...

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டி.. 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி...
X

3 விக்கெட் வீழ்த்திய இந்திய அணி வீரர் முகமது ஷமியை பாராட்டும் சக வீரர்கள்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ராய்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதைத்தொடர்ந்து, நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பின் ஆலன், டெவன் கன்வே ஆகியோர் களமிறங்கினர்.

போட்டித் தொடங்கியதில் இருந்த இந்திய அணியின் பந்து வீச்சில் அனல் பறந்தது. ஆலன் ரன் ஏதும் எடுக்காமல் முகமது ஷமி பந்து வீச்சிலும், கன்வே 7 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்திக் பாண்டியா பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களம் இறங்கிய நிக்கோலஸ் 2 ரன்களிலும், மிட்சேன் ஒரு ரன்னிலும், டாம் லாதம் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.


10.3 ஓவரில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நியூஸிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் 5 பேர் ஆட்டமிழந்து திணறினர். இதைத்தொடர்ந்து, ஓரளவு நிலைத்து ஆடிய கிளின் பிலிப்ஸ் 36 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

பிராக்வெல் 22 ரன்களிலும், சாண்டனர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களம் இறங்கிய பெர்குசன் ஒரு ரன்னிலும், டிக்னர் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஸ்ப்லி 2 ரன்களுடன் களத்தில் நின்றார். இதனால், நியூஸிலாந்து அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களில் சுருண்டது.


இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

தொடர்ந்து, 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர்.

2 சிக்ஸ் 7 பவுண்ட்ரிகளுடன் 50 பந்துகளில் 51 ரன்கள் குவித்திருந்த நிலையில், ஸ்ப்லி பந்துவீச்சில் ரோகித் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாண்ட்னர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த சுப்மன் கில்லும், இசான் கிஸனும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். 20.1 ஓவரில் 111 ரன்களை எடுத்து இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுப்மன் கில் 40 ரந்களிலும், இசான் கிஸன் 8 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.

இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய முகமது ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கெனவே, முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி ஜனவரி 24 ஆம் தேதி இந்தூரில் நடைபெறுகிறது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!