டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த கேப்டவுன் போட்டி
இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக பந்து வீசிய பும்ராவை பாராட்டும் இந்திய அணியினர்
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் 153 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கோலி 46 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபடா, நிகிடி மற்றும் பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து முதல் நாளிலேயே தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் அடித்திருந்தபோது முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. மார்க்ரம் 36 ரன்களுடனும், டேவிட் பெடிங்காம் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.
இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டேவிட் பெடிங்காமை அவுட்டாக்கி பும்ரா தனது விக்கெட் வேட்டையை ஆரம்பித்தார். தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய அவர் இந்த ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தனி ஆளாக போராடிய தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் சதமடித்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார். அதிரடியாக விளையாடிய அவர் 103 பந்துகளில் 106 ரன்கள் அடித்த நிலையில் சிராஜ் ஓவரில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்சில் 36.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 176 ரன்கள் அடித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 79 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 80 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த டெஸ்ட் போட்டி இரண்டாவது நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 28 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பர்கர், ரபடா மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது.
கேப்டவுனில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி வெறும் 642 பந்துகளிலேயே (107 ஓவர்கள்) முடிவுக்கு வந்தது. இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் முடிவடைந்த போட்டி என்ற மாபெரும் சாதனையை இது படைத்துள்ளது.
இதற்கு முன்னர் 1932ஆம் ஆண்டு மெல்பொர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான போட்டி 656 பந்துகளில் (109.2 ஓவர்கள்) முடிவடைந்ததே சாதனையாகும். தற்போது அந்த சாதனையை கேப்டவுன் டெஸ்ட் போட்டி முறியடித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu