இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 25) ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து பேர்ஸ்டோ 37 ரன்களும், பென் டக்கெட் 35 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இருப்பினும், ரோஹித் சர்மா 24 ரன்களில் ஜாக் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ஜெய்ஸ்வாலுடன் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.
தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து அசத்தினார். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அவ்வப்போது வந்த வண்ணமே இருந்தன. இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ஜெய்ஸ்வால் 76 ரன்களுடனும் (9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), ஷுப்மன் கில் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 127 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu