இந்தியா நியூசிலாந்து ஒருநாள் போட்டி தொடர்: ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை தோற்கடித்து 'ஹாட்ரிக்' வெற்றியுடன் நியூசிலாந்து அணியை 'ஒயிட்வாஷ்' செய்யும் ஆவலுடன் இந்திய அணி களம் இறங்குகிறது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்தியா வலுவாக உள்ளது. முதலாவது ஆட்டத்தில் இரட்டைசதம் விளாசிய சுப்மன் கில் அடுத்த ஆட்டத்தில் ஆட்டம் இழக்காமல் 40 ரன்கள் எடுத்து சூப்பர் பார்மில் இருக்கிறார். கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். விராட்கோலி 2 ஆட்டங்களிலும் (8, 11 ரன்) இடக்கை சுழற்பந்து வீச்சாளரான மிட்செல் சான்ட்னெரிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு பேட்டிங் வாய்ப்பு செய்ய கிடைக்கவில்லை.
முதல் ஆட்டத்தில் இறுதி ஓவர்களில் பந்து வீச்சில் சொதப்பிய முகமது ஷமி, முகமது சிராஜ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இரண்டாவது போட்டியில் மிரட்டினர். சுழற்பந்து வீச்சாளர்களும் தங்கள் பணியை சரியாக செய்தனர். இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். தொடரை வென்று விட்டதால் இந்திய அணியின் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் 350 ரன் இலக்கை நெருங்கி வந்து தான் கோட்டை விட்டது. ஆனால் இரண்டாது ஆட்டத்தில் 34.3 ஓவர்களில் 108 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் பேட்டிங்கில் மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர் மட்டுமே சிறப்பாக ரன் சேர்க்கின்றனர். 'டாப் 6' பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து தடுமாறி வருகின்றனர்.
இரண்டாவது போட்டியின் மோசமான தோல்வியை ஈடுகட்டவும், சரிவில் இருந்து மீண்டு ஆறுதல் வெற்றியை பெறவும் நியூசிலாந்து அணி எல்லா வகையிலும் போராடும். அதேநேரத்தில் இந்த தொடரை முழுமையாக (3-0) வென்றால் ஒருநாள் போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இந்தியா பிடிக்க முடியும் என்பதால் இந்தியாவும் வரிந்து கட்டும்..
இந்தூர் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பதுடன், இங்கு பவுண்டரி தூரம் குறைவாக இருப்பதால் ரன் மழை பொழிய வாய்ப்புள்ளது. இந்த மைதானத்தில் 5 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் இந்திய அணி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட்கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி அல்லது உம்ரான் மாலிக்.
நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, ஹென்றி நிகோல்ஸ் அல்லது மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர், டக் பிரேஸ்வெல் அல்லது ஹென்றி ஷிப்லி அல்லது ஜேக்கப் டப்பி, லோக்கி பெர்குசன், பிளேர் டிக்னெர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu