ஷாக் கொடுத்த நெதர்லாந்து, வெளியேறிய தென்னாப்பிரிக்கா: அரையிறுதியில் இந்தியா

ஷாக் கொடுத்த நெதர்லாந்து, வெளியேறிய தென்னாப்பிரிக்கா: அரையிறுதியில் இந்தியா
X

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நெதர்லாந்து அணியினர்

டி20 சூப்பர் 12 போட்டியில் நெதர்லாந்து அபார வெற்றி பெற்றதன்மூலம் தென் ஆப்பிரிக்காவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக மோதி வருகின்றன.

குரூப்1-ல் லீக் சுற்று போட்டிகள் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. இந்த நிலையில் குரூப்2-ல் இருந்து அரைஇறுதிக்குள் நுழையும் இரண்டு அணிகள் எவை? என்பதை நிர்ணயிக்கும் இறுதி கட்ட 3 லீக் ஆட்டங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தால் அரைஇறுதியை எட்டும் என்ற நிலையில் களமிறங்கியது . 2 புள்ளியுடன் கடைசி இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியின் அரைஇறுதி வாய்ப்பு முடிந்து போய் விட்டது.

இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.

இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக ஸ்டீபன் மைபர்க், மேக்ஸ் ஓடவ்ட் ஆகியோர் களம் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு மிகச்சிறப்பான தொடக்கம் அமைத்த இந்த ஜோடி 58 ரன்னில் பிரிந்தது, மைபர்க் 37 ரன்னில் கேட்ச் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய டாம் கூப்பர் அதிரடியாக ஆடி 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஓடவ்ட் 29 ரன்னில் கேட்ச் ஆனார். அக்கேர்மென் 41 ரன்னும், டாம் கூப்பர் 35 ரன்னும் எடுத்தனர்

இறுதியில் நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் அரையிறுதிக்கும் செல்லலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், பவுமா ஆகியோர் களம் புகுந்தனர். இதில் டிகாக் 13 ரன்னுக்கும், பவுமா 20 ரன்னுக்கும் அவுட் ஆக, அடுத்து களம் புகுந்த ரோசவ் 25 ரன்கள் எடுத்தார். மார்க்ரம் 17 ரன்னுக்கும், அதிரடி ஆட்டக்காரர் மில்லர் 17 ரன்னுக்கும், பார்னெல் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே, தென்னாபிரிக்கா அணி 113 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை தடுமாறியது

தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் கிளாசென் மற்றும் மக்ராஜ் ஆகியோர் களத்தில் இருந்தனர். ஆட்டத்தின் 18 வது ஓவரை வீசிய டி லீட் க்ளாசெனின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் ஆட்டத்தில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவை என்ற நிலையில், 19 வது ஓவரில் 10 ரன்களை எடுத்தனர். இதையடுத்து கடைசி 6 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தால் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரை வீசிய டீ லீட்டின் முதல் பந்தில் மகராஜ் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க தவறியதால் தப்பித்தார். 2 வது பந்தை வைடாக வீசிய அவர், மறுபடியும் வீசிய 2வது பந்தை நோ பாலாக வீசினார். ஆனால், ஐந்தாவது பந்தில் மகராஜ் அவுட்டாக, தென்னாப்பிரிக்காவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.

இறுதியில் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களே எடுக்க முடிந்தது. இதையடுத்து நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பை தகர்த்தனர்.

நெதர்லாந்து அணி தரப்பில் க்ளெவர் 3 விக்கெட்டும், க்ளாசென், டீ லீட் தலா 2 விக்கெட்டும், மீக்கெரன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த தோல்வியின் மூலம் தென் ஆப்பிரிகாவின் அரையிறுதி வாய்ப்பு முடிந்து போய் விட்டது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி விட்டது. மேலும் அடுத்து நடைபெறும் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி 2வது அணியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil