ரோஹித் அதிரடி வீண்: வங்கதேசத்திற்கு எதிராக தொடரை இழந்தது இந்தியா
3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி வங்கதேசம் சென்றுள்ளது. ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது தொடக்க வீரர்களாக அனமுல் ஹக், லிட்டன் தாஸ் களமிறங்கினர். அனமுல் ஹக் 11 ரன்களிலும், லிட்டன் தாஸ் 7 ரன்களிலும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 21 ரன்களிலும், ஷாகிப் அல் ஹசன் 8 ரன்களிலும்,வெளியேறினர். இதனால் வங்காளதேச அணி தடுமாறியது.
வங்காளதேசத்தை 19 ஓவர்களில் 69/6 என்று கட்டுப்படுத்திய நிலையில் மிடில் மற்றும் கடைசி ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சு எடுபடவில்லை. அடுத்து மகமதுல்லா ,மெஹிதி ஹசன் மிராஸ், இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய மகமதுல்லா அரைசதம் அடித்து 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.
வங்கதேச அணியை 7-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர்கள் மக்முதுல்லாவும், மெஹிதி ஹசன் மிராசும் கைகோர்த்து காப்பாற்றினர். முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான மெஹிதி ஹசன் மிராஸ் இந்திய பந்து வீச்சை பின்னியெடுத்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். சதத்தை எட்ட கடைசி ஓவரில் அவருக்கு 15 ரன் தேவைப்பட்டது. ஷர்துல் தாக்குர் வீசிய இறுதி ஓவரில் 2 சிக்சர் பறக்க விட்ட அவர் கடைசி பந்தில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் சேர்த்தது. மெஹிதி ஹசன் மிராஸ் 100 ரன்களுடனும் (83 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), நசும் அகமது 18 ரன்களுடனும் (11 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். அவர்கள் கடைசி 10 ஓவர்களில் 102 ரன்கள் குவித்தனர்.
வங்கதேச அணியின் ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் 8-வது வரிசையில் களம் புகுந்து சதம் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டி வரலாற்றில் 8 மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி ஒரு வீரர் சதம் விளாசுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு அயர்லாந்தின் சிமி சிங் 2021-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 8-வது வரிசையில் இறங்கி 100 ரன்கள் அடித்திருந்தார்.
இந்தியா சார்பில் வாஷிங்க்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், சிராஜ், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடர்ந்து 272 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடியது. காயம் காரணமாக ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கவில்லை.இதனால் ஷிகர் தவான், விராட் கோலி களமிறங்கினர்.
விராட் கோலி 5 ரன்கள், தவான் 8 ரன்கள் எடுத்து வெளியேறினர். பின்னர் சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.
விராட் கோலி, ஷிகர் தவான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் முதல் 19 ஓவர்களுக்குள் வீழ்ந்ததால், ஆட்டம் இந்தியாவின் கையில் இருந்து நழுவியது போல் இருந்தது-. டாப் ஆர்டர் சீட்டுக்கட்டு போல் சரிந்த நிலையில், 3-வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் கிரீஸுக்கு வரும் வரை கோட்டையை ஒரு முனையில் பிடித்து சுமையை பகிர்ந்து கொண்டார். இருவரும் இணைந்து 107 ரன்களை பகிர்ந்து கொண்டனர், அதே நேரத்தில் அக்சர் 56 ரன்கள் எடுத்தார், இந்தியா வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை அளித்தது. இருப்பினும், இருவரும் நான்கு ஓவர் இடைவெளியில் வெளியேறியதால், நம்பிக்கை தகர்ந்தது. ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்களுக்கும் , அக்சர் படேல் 56 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் காயத்துடன் ரோகித் சர்மா களமிறங்கினார். அவர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்த அவர் அரைசதம் கடந்தார் ..கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது.அந்த ஓவரை முஸ்தபிசுர் ரகுமான் வீசினார். ஆனால் 14 ரன்களே அடிக்க முடிந்தது.
ரோஹித் ஷர்மா 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தாலும், கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. முஸ்தாபிசுர் ரஹ்மானின் யார்க்கர், கடைசி பந்தில் ரன் எடுக்க முடியாமல் செய்து விட்டது
50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களே எடுத்தது. இதனால் வங்காளதேசம் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என வங்காளதேசம் வென்றது.
இந்தியாவை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சொந்த மண்ணில் இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது தொடர்ச்சியான ஒருநாள் தொடரை வென்றது.
இந்தியா தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன் அவற்றைத் திருத்திக் கொள்ள முடியுமா? காலம்தான் அதைச் சொல்லும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu