தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பட்டம் வெல்லும் முனைப்பில் இந்தியா

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பட்டம் வெல்லும் முனைப்பில் இந்தியா
X
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் 9-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய அணி இறுதி ஆட்டத்தில் குவைத்துடன் மோதுகிறது

14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் இன்றிரவு (செவ்வாய்க்கிழமை) அரங்கேறுகிறது.

உலக தரவரிசையில் 100-வது இடம் வகிக்கும் இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், நேபாளத்தை தோற்கடித்தது. குவைத்துக்கு எதிரான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பிறகு அரைஇறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் லெபனானை தோற்கடித்தது.

8 முறை சாம்பியனான இந்தியா 9-வது முறையாக பட்டம் வெல்ல தீவிரம் காட்டுகிறது. கேப்டன் சுனில் சேத்ரியையே (இதுவரை 5 கோல்) இந்தியா அதிகமாக நம்பி இருக்கிறது. அவருடன் மற்றவர்களும் ஒருசேர கைகோர்த்தால் தான் பலம் வாய்ந்த குவைத் அணியை வெல்ல முடியும். இரண்டு மஞ்சள் அட்டை பெற்றதால் அரைஇறுதியில் ஆடமுடியாமல் போன முன்னணி வீரர் சந்தோஷ் ஜின்கான் அணிக்கு திரும்புவது ஊக்கமளிக்கும். அத்துடன் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் இந்தியாவுக்கு சாதகமான அம்சமாக இருக்கும்.

தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் குவைத்துக்கு எதிரான லீக்கின் போது நடுவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 2 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் அவர் வீரர்களின் பகுதியில் அமர முடியாது. அவருக்கு பதிலாக உதவி பயிற்சியாளர் மகேஷ் காவ்லி பயிற்சியாளர் பணியை கவனிப்பார்.

சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்ட மேற்கு ஆசியாவை சேர்ந்த அகமது அல் டெப்ரி தலைமையிலான குவைத் அணி தரவரிசையில் 141-வது இடத்தில் இருக்கிறது. லீக் சுற்றில் இந்தியாவுடன் 'டிரா' கண்ட அந்த அணி நேபாளம், பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது. அரைஇறுதியில் கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வென்றது. முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் வரிந்து கட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 2-ல் குவைத்தும், ஒன்றில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மற்றொரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!