இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்தியா
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித், ஜடேஜாவின் அபார சதம் மற்றும் அறிமுக வீரர் சர்பராஸ் கானின் அரை சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 51 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 196 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 65 ரன்னுடனும், குல்தீப் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று நான்காவது நாள் ஆட்டத்தில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் (ரன் அவுட்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரிட்டையர் ஹர்ட் மூலம் வெளியேறிய ஜெய்ஸ்வால் களமிறங்கினார். மறுபுறம் குல்தீப் யாதவ் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். சர்பராஸ் கான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமடித்தார். மறுபுறம் ஜெய்ஸ்வால் அதிரடியை தொடங்கினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 231பந்துகளில் (14 பவுண்டரி , 10 சிக்சர் ) இரட்டை சதமடித்து அசத்தினார்.
இந்திய அணி 98 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 445 ரன்கள் எடுத்து 556 ரன்கள் முன்னிலையுடன் இருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து, இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அந்த அணி வீரர்கள் ஜாக் கிராலி 11 ரன்களிலும், டக்கெட் 4 ரன்களிலும், ஒல்லி போப் 3 ரன்களிலும், ஜோ ரூட் 7 ரன்களிலும், பேர்ஸ்டோ 4 ரன்களிலும், கேப்டன் ஸ்டோக்ஸ் 15 ரன்களிலும், ரெஹன் அகமது ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். இறுதி கட்டத்தில் மார்க் வுட்டின் அதிரடியால் அந்த அணி 100 ரன்களை தாண்டியது.
முடிவில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 122 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற வெற்றியாக இது அமைந்துள்ளது.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் பும்ரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu