பரபரப்பான கட்டத்தில் 2 ஆவது டெஸ்ட் போட்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு 100 ரன்கள் தேவை…
சிறப்பாக பந்து வீசிய அக்ஸார் படேலை பாராட்டும் சக வீரர்கள்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்தது. இதற்கிடையே, இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டோகிராம் நகரில் உள்ள சகூர் அகமது சௌத்ரி மைதானத்தில் கடந்த 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டாக்காவில் உள்ள தேசிய மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் சாஹிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 73.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களுக்குள் சுருண்டது. மோமினில் ஹக் மட்டும் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜெயதேவ் உனத்கட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 86.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 5 சிக்ஸ், 7 பவுண்ட்ரிகளுடன் 104 பந்தில் 93 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வங்கதேசம் அணி கேப்டன் சாஹிப் அல் ஹசன் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். வங்கதேசம் அணி தரப்பில் கேப்டன் சாஹில் அல் ஹசன், தாஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. 5 ரன்களுடன் களத்தில் நின்ற வங்கதேசம் அணியின் தொடக்க வீரர் சான்டோ மேலும் ரன் ஏதும் எடுக்காத நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஜாஹிர் ஹசன் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களம் இறங்கியவர்களில் லிட்டன் தாஸ் தவிர அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். நூருல் ஹாசன், தக்சின் அகமது ஆகியோர் தலா 31 ரன்கள் எடுத்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸ் 98 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது சிராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். வங்கதேசம் அணியின் இரண்டாவது இன்னிங்கிஸ் 231 ரன்களுக்குள் முடிவுக்கு வந்தது. இந்திய அணி தரப்பில் ஆகியோர் அக்ஸார் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
145 ரன்கள் வெற்றி இலக்கு:
இதைத் தொடர்ந்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் கே.எல். ராகுல் 2 ரன்கள் எடுத்திருந்தபோது சாஹ்ப் அல் ஹசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களம் இறங்கிய புஜாரா 6 ரன்கள் எடுத்த நிலையிலும், தொடக்க வீரர் சுப்மன் கில் 7 ரன்களிலும், வீரட் கோலி ஒரு ரன்னினிலும் அடுத்தடுத்து மெஹிந்தி ஹாசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்திருந்தது. அக்ஸார் படேல் 26 ரன்களுடனும், உனத்கட் 3 ரன்களிடனும் களத்தில் உள்ளனர்.
முக்கிய வீரர்கள் நான்கு பேரின் விக்கெட்டை இந்திய அணி இழந்துள்ளதாலும், வங்கதேசம் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி வருவதாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது என்றே கூறலாம். இன்னும் 6 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில், இந்திய அணி வெற்றி பெற 100 ரன்கள் மட்டுமே தேவை.
இருப்பினும், 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளதால் தற்போது களத்தில் உள்ள ஆல் ரவுண்டர் அக்ஸார் படேல் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இந்திய அணியின் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu