வங்கதேசம் அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள்…

வங்கதேசம் அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள்…
X

சிறப்பாக விளயாடிய ரிஷப் பந்த்- ஸ்ரேயாஸ் அய்யர்.

இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்தது. இதற்கிடையே, இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டோகிராம் நகரில் உள்ள சகூர் அகமது சௌத்ரி மைதானத்தில் கடந்த 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில், சிறப்பாக பந்து வீசி முதல் இன்னிங்கிஸில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்கிஸில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு உதவிய இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டாக்காவில் உள்ள தேசிய மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் சாஹிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வங்கதேசம் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணி 73.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களுக்குள் சுருண்டது. மோமினில் ஹக் மட்டும் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜெயதேவ் உனத்கட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுலும், சுப்மன் கில்லும் தொடங்கினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 3 ரன்களுடனும், சுப்மன் கில் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், வங்கதேசம் அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி பேட்டர்கள் ரன்களை குவிக்க முடியாமல் திணறினர். கேப்டன் கே.எல். ராகுல் 10 ரன்களிலும், சுப்மன் கில் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்கள் இருவரது விக்கெட்டையும் தாஜுல் இஸ்லாம் கைப்பற்றினார்.

மிகவும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய வீரட் கோலி, புஜாரா ஆகியோரும் தலா 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு, ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

ஒருநாள் போட்டி போல விளையாடிய ரிஷப் பந்த் 5 சிக்ஸ், 7 பவுண்ட்ரிகளுடன் 104 பந்தில் 93 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். மற்றொரு முனையில் சிறப்பாக ஆடி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வங்கதேசம் அணி கேப்டன் சாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, உமேஷ் யாதவ், உனத்கட் ஆகியோர் தலா 14 ரன்களிலும், அஸ்வின் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 86.3 ஓவர்களில் அனைத்த விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் அணி தரப்பில் கேப்டன் சாகில் அல் ஹசன், தாஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்திய அணியை விட 87 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தது. சான்டோ 5 ரன்களிலும், ஜாஹீர் ஹசன் 2 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு