முதல் டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த தென்னாப்பிரிக்க அணி
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் டிசம்பர் 26 தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 101 ரன்கள் எடுத்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நண்ட்ரே பர்கர் 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜேன்சன் மற்றும் ஜெரால்டு கோட்டீஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் டீன் எல்கர் அதிகபட்சமாக 185 ரன்கள் எடுத்தார். அதில் 28 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக மார்கோ ஜேன்சன் 84 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்குர், பிரசித் கிருஷ்ணா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் 163 ரன்கள் பின் தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது இந்திய அணி. விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில்லைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 131 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. தனி ஒருவனாகப் போராடிய விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தென்னாப்பிரிக்க தரப்பில் நண்ட்ரே பர்கர் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 131 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்ததன் மூலம் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu