மொகாலியில் இந்தியா- ஆஸ்திரேலியா முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: மழை விளையாடுமா?

மொகாலியில் இந்தியா- ஆஸ்திரேலியா முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: மழை விளையாடுமா?
X
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்றிரவு நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிய கோப்பை தோல்விக்கு பிறகு இந்தியா விளையாடும் முதல் போட்டி இதுவாகும். அடுத்த மாதம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில் தங்களை தயார்படுத்திக் கொள்ள இந்த தொடர் உதவிகரமாக இருக்கும்.

ஆசிய கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசி மீண்டும் பார்முக்கு திரும்பிய விராட் கோலியின் பேட்டிங் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவருக்கு ஆஸ்திரேலிய பவுலர்கள் பவுன்சர்களை வீசி குடைச்சல் கொடுக்கக்கூடும் என்பதால் கோலி நிறைய பவுன்சர்களை பந்து எதிர்கொண்டு பயிற்சி மேற்கொண்டார்.

இதே போல் கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் நல்ல தொடக்கம் தர வேண்டியது அவசியமாகும். ஆசிய கிரிக்கெட்டில் மந்தமாக ஆடியதால் விமர்சிக்கப்பட்ட ராகுல், அதற்கு பரிகாரம் தேட வேண்டிய நெருக்கடியில் உள்ளார்..

காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் அணிக்கு திரும்பியிருப்பது பந்து வீச்சை வலுப்படுத்தும். காயத்தால் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பெறாத நிலையில் மற்றொரு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தாக்கத்தை ஏற்படுத்தினால் அது அணிக்கு உற்சாகம் தரும்.

விக்கெட் கீப்பர்களான ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையேயான தேர்வுதான் அணி தேர்வாளர்களுக்கு மிகப்பெரிய சங்கடமாக இருக்கும்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகிய முன்னணி வீரர்களுக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டாலும் அந்த அணி வலுவாகவே தென்படுகிறது. ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல் அதிரடியில் மிரட்டுவார்கள். ஆல்-ரவுண்டர் டிம் டேவிட் அறிமுக வீரராக விளையாட இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

பந்து வீச்சில் ஹேசில்வுட், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் நம்பிக்கை அளிக்கிறார்கள். அதே சமயம் கேப்டன் ஆரோன் பிஞ்ச், சமீப காலமாக போதிய ரன் எடுக்க முடியாமல் தடுமாறுவது அந்த அணிக்கு சற்று பலவீனமாக பார்க்கப்படுகிறது. பழைய நிலைக்கு திரும்ப இந்திய போட்டியை பயன்படுத்தி கொள்ளும் ஆவலில் உள்ளார்.

பிஞ்ச் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இந்த தொடரில் நாங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவுகளும் உலக கோப்பை நோக்கியே இருக்கும். முந்தைய தினம் மொகாலி ஆடுகளத்தை பார்த்தேன். கொஞ்சம் புற்கள் இருந்தது. இங்குள்ள ஆடுகளத்தில் பந்தை நன்கு 'ஸ்விங்' செய்ய முடியும். இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 71 சதங்கள் அடித்துள்ளார். அவரது ஆட்டத்திறன் வீழ்ச்சியடைவதாக சொல்வது அபத்தமானது. 20 ஓவர் கிரிக்கெட்டில் அவர் தனது ஆட்டத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார். உலகின் சிறந்த வீரரான அவருக்கு எதிராக பந்து வீசுவதற்கு நன்றாக தயாராக இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார். மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

போட்டி நடக்கும் மொகாலி மைதானத்தில் இதுவரை ஐந்து 20 ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. இவற்றில் இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது. இதில் 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை சூப்பர்10 சுற்றில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதும் அடங்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் அல்லது தீபக் ஹூடா அல்லது அக்‌ஷர் பட்டேல், ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஜோஷ் இங்லிஷ், ஸ்டீவன் சுமித், டிம் டேவிட், கேமரூன் கிரீன், மேத்யூ வேட், மேக்ஸ்வெல், கம்மின்ஸ், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் அல்லது ஆஷ்டன் அகர்.

வானிலை மேகமூட்டத்துடன் இருப்பதால், மாலையில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை மொஹாலியில் நிலைமைகள் ஈரப்பதமாக இருக்கும் என்பதால் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸின் ஆரம்ப பகுதியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!