இலங்கைக்கு அடுத்த அதிர்ச்சி! இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சஸ்பெண்ட் செய்தது ஐசிசி
இலங்கை கிரிக்கெட் வாரியம்
இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இதில், கடைசி நேரத்தில் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற இலங்கை விளையாடிய 9 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.
1996 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வென்று கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணி, இந்த உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக ஆடியது.
உலகக் கோப்பை தொடரில் தொடர் தோல்வி மற்றும் இந்தியாவிற்கு எதிராக மோசமான தோல்வி காரணமாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணதுங்கா இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அதிரடியாக கலைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தான், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை கிரிக்கெட்டின் ஐசிசி உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சஸ்பெண்ட் செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு உறுப்பினராக அதன் கடமைகளை மீறியுள்ளது, குறிப்பாக அதன் விவகாரங்களை தன்னாட்சி மற்றும் அரசாங்க தலையீடு இல்லாமல் நிர்வகிக்க வேண்டும்.
இடைநீக்கம் குறித்த நிபந்தனைகள் ஐசிசி வாரியத்தால் உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்" என்று கூறியுள்ளது. வரும் 21ஆம் தேதி ஐசிசி வாரியம் கூடுகிறது. அதன் பிறகு எதிர்கால நடவடிக்கை தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை இலங்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட் வாரியமானது அதிரடியாக கலைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu