டி20 உலகக் கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா மற்றும்இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இந்திய அணியில் மாற்றம் ஏதும் இல்லாமல் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றனர். கே.எல்.ராகுல் 5 ரன்களில் அவுட்டாகி மீண்டும் அதிர்ச்சியளித்தார். அடுத்து கேப்டன் ரோகித் ஷர்மாவும் 28 பந்துகளில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறி மீண்டும் ஏமாற்றம் அளித்தார். உலகக்கோப்பை போட்டிகளில் விளாசிய சூர்யகுமார் யாதவ் அடித்து விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
விராட் கோலி பொறுப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். 39 பந்துகளில் அரைசதம் அடித்த கையோடு கோலி கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். மறுபக்கம் பவுண்டரிகளை பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார்.
இதை தொடர்ந்து 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களம் புகுந்த அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பட்லர் முதல் ஓவரில் மூன்று பவுண்டரிகள் மூலம் இங்கிலாந்தின் பரபரப்பான துரத்தலுக்கு பதிலடி கொடுத்தார்.
இதனால் பவர்பிளே முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை குவித்தது. சிக்சர் மழை பொழிந்த ஹேல்ஸ் 28 பந்துகளில் 5 சிக்சர்களுடன் அரைசதம் கடந்தார். இந்திய பந்துவீச்சாளர்கள் எவ்வளவு முயன்றும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி பார்த்தும் இங்கிலாந்து அணி அசரவில்லை. இந்த ஜோடியின் அதிரடியால் இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 98 ரன்களை குவித்தது.
ஹேல்ஸை தொடர்ந்து கேப்டன் பட்லர் 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த ஜோடி 13.5 ஓவர்களில் 150 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களுடனும் (47 பந்துகள்) , ஜோஸ் பட்லர் 80 ரன்களுடனும் (49 பந்துகள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நவம்பர் 13 அன்று நடைபெறும் இறுதி போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஒரே ஆறுதல், விராட் கோலி இந்த போட்டியில் தனது 4வது அரைசதத்தை அடித்தார் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் 4000 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் ஆனார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu