செஸ் கேண்டிடேட்ஸ் போட்டியில் 17 வயதில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ்!
17 வயதில் சாம்பியன் வென்ற தமிழக வீரர் குகேஷ்
உலகச் செஸ் சாம்பியனுடன் விளையாடப் போகும் வீரரைத் தேர்வு செய்வதற்கான 'பிடே கேண்டிடேட்ஸ்' (FIDE Candidates 2024) சர்வதேச செஸ் போட்டி கனடாவின் டொரோண்டோ நகரில் நடைபெற்றது. இதில், 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் உள்ள ஒவ்வொருவரும் மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்த போட்டியில், 'ரவுண்ட் ராபின்' முடிவில் முதலிடத்தைப் பிடிக்கும் வீரர், நடப்பு உலகச் செஸ் சாம்பியனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார். இதில் இந்தியாவில் இருந்து பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தொடரின் 13வது சுற்றுகளின் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முதல் இடம் வகித்தார். அவருக்கு அடுத்தபடியாக அமெரிக்காவை சேர்ந்த ஹிகாரு நகமுரா, ரஷ்யாவை சேர்ந்த இயன் நெபோம்னியச்சி, காருனா ஆகியோர் 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் வகித்தனர்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற 14வது சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், அமெரிக்காவை சேர்ந்த ஹிகாரு நகமுராவை எதிர்கொண்டர். பரபரப்பான சூழ்நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியை டிரா செய்தார் குகேஷ்.
இதனால், இருவருக்கு தலா 1/2 புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் மொத்தமாக 9 புள்ளிகளைப் பெற்றார் குகேஷ். மறுபுறம் நடைபெற்ற நெபோம்நியாச்சி- பேபியானோ காருனா ஆகியோரின் ஆட்டமும் டிராவில் முடிவுற்றது.
இதனால், புள்ளிகளின் அடிப்படையில் சாம்பியன் பட்டத்தை வென்றார் குகேஷ். இதன் மூலம் இளம் வயதில்(17) 'பிடே கேண்டிடேட் செஸ்' தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியன்ஸ் போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை விரைவில் எதிர்கொள்ள உள்ளார் குகேஷ்.
கேண்டிடேடஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு சாம்பியன் பட்டம் வெல்லும் 2வது இந்திய வீரர் என்றபெருமையைப் பெற்றுள்ளார் குகேஷ், அவரது இந்த வெற்றிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து விஸ்வநாதன் ஆனந்த் தனது 'எக்ஸ்' பக்கத்தில் "இளம் போட்டியாளராக மாறிய டி. குகேஷ்க்கு வாழ்த்துக்கள். குடும்பமே நீங்கள் செய்ததை நினைத்துப் பெருமைப்படுகிறது. கடினமான சூழ்நிலைகளை நீங்கள் விளையாடிய விதம் மற்றும் குறித்து நான் தனிப்பட்ட முறையில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த தருணத்தை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu