இந்தியன்ஆயில் விளையாட்டு நட்சத்திர மண்டலத்தில் இடம் பெறும் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா
சென்னையில் நேற்று நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில், கிராண்ட் மாஸ்டர் ரமேஷ் பாபு பிரக்ஞானந்தாவுக்கு பணிக் கால அடிப்படையிலான பணி நியமன கடிதத்தை இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா வழங்கினார். தெற்கு மண்டல செயல் இயக்குநர் (மண்டல சேவைகள்) கே. சைலேந்திரா, செயல் இயக்குநர் மற்றும் மாநில தலைவர் (தமிழ்நாடு & புதுச்சேரி) வி. சி. அசோகன், கிராண்ட் மாஸ்டர் சசிகரன், கிராண்ட் மாஸ்டர் கார்த்திகேயன் முரளி மற்றும் பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி. ரமேஷ் மற்றும் பிற முக்கிய அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா தமது சிறப்புரையில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, சதுரங்கத்தில் சிகரம் தொட்டதற்காக பாராட்டி இந்தியன்ஆயில் நிறுவனத்தின் விளையாட்டு நட்சத்திரம் ஆகி உள்ளதற்கு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வருங்காலத்தில் அவர் உலகின் முதல் நிலை சதுரங்க ஆட்டக்காரராக மிளிர வேண்டும் என்கிற கனவு நனவாக அவருடைய அனைத்து முயற்சிகளுக்கும் செயல்களுக்கும் இந்தியன்ஆயில் நிறுவனம் உறுதுணையாக இருக்கும் என்றார்.
தலைவர் மேலும் பேசுகையில் விளையாட்டு துறை வளர்ச்சி பெறவும் இந்தியாவில் பிரகாசிக்க விரும்பும் விளையாட்டு திறமையாளர்கள் முன்னுக்கு வரவும் சமூகப் பொறுப்புணர்வு மிக்க ஒரு பெரு நிறுவனமாக இந்தியன்ஆயில் அளித்து வரும் பங்களிப்பு பற்றி எடுத்துரைத்தார். தற்போது அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்திய, சதுரங்க ஆட்டத்தில் மற்றும் பிற விளையாட்டுகளில் சாதிக்க விரும்பும் இளையோருக்கு முன்மாதிரியாக விளங்கும் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தங்கள் உறுப்பினர் ஆக்கியதில் இந்தியன்ஆயில் நிறுவனம் பெருமை கொள்கிறது. இந்தியாவில் விளையாட்டு துறையில் உச்சத்தை தொடும் குறிக்கோளாகக் கொண்ட தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் ஆதரவும் இந்தியன்ஆயில் நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது. நாட்டின் பலதரப்பட்ட விளையாட்டுகளை சார்ந்த உலக சாம்பியன்களை உருவாக ஏதுவாக, கடந்த முப்பது ஆண்டுகளாக இளம் விளையாட்டு திறமையாளர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறது என்றும் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
இந்தியன் ஆயில் நிறுவனம், நாடெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களை மேம்படுத்தும் வகையில் அவர்களைப் பணியில் அமர்த்தி வருகிறது. மேலும், வளர்ந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு ஸ்காலர்ஷிப் வழங்குவதுடன் அவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளையும் நிறுவனம் நடத்தி வருகிறது. சமூகப் பொறுப்புணர்வு பணிகள் (CSR) மூலமாக, விளையாட்டுகளை ஊக்குவிக்க நிறுவனம் மேற்கொண்டுள்ள செயல்களுக்காக, இந்தியன்ஆயில் நிறுவனத்திற்கு " ராஷ்ட்ரீய ப்ரோத்சாஹன் புரஸ்கார்" வழங்கப்பட்டது.
சமூகப் பொறுப்புணர்வு மிக்க நிறுவனமாக இந்தியன்ஆயில் நிறுவனம், 19 வயதிற்குட்பட்ட இளம் தலைமுறையினரை கண்டெடுத்து ஊக்கம் அளிக்கும் வகையிலும் அவர்கள் வருங்காலத்தில் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் ஆக திகழ ஸ்காலர்ஷிப் திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.
சதுரங்க சாம்பியனை வரவேற்பதிலும் அவரது சாதனையை அங்கீகரிப்பதிலும் இந்தியன்ஆயில் நிறுவனம் பெருமை கொள்கிறது, என இந்தியன்ஆயில் தென் மண்டல தலைமை பொது மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்) வி.வெற்றி செல்வ குமார் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu