முன்னாள் விளையாட்டு வீரரா நீங்கள்? அரசு வழங்கும் உதவித் தொகையை மிஸ் பண்ணிடாதீங்க…
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).
தமிழகத்தில் நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
விளையாட்டுத் துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 6000 வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரியின் www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது.
இந்த உதவித் தொகை பெற சர்வதேச அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும். சர்வதேச அல்லது தேசிய போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம் அல்லது மூன்றாமிடம் இடங்களில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும்.
தகுதியான விளையாட்டுப் போட்டிகள்:
மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் அல்லது இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.
வயது வரம்பு தகுதி:
2023 ஆம் வருடம் ஜனவரி மாதம் (31.01.2023) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000 -இல் இருந்து ரூ. 15000-க்குள் இருத்தல் வேண்டும்.
மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவோர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
உதவித் தொகை பெற www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஏப்ரல் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu