வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: வெற்றிப் பாதையில் இந்திய அணி…

வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: வெற்றிப் பாதையில் இந்திய அணி…
X

3 விக்கெட்டுகள் வீழ்த்திய அக்ஸார் படேலை பாராட்டும் சக வீரர்கள்.

இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டோகிராம் நகரில் உள்ள சகூர் அகமது சௌத்ரி மைதானத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை செய்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில், புஜாரா 90 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்களும் எடுத்தனர். மேலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 46 ரன்களும், அஸ்வின் 58 ரன்களும், குல்தீப் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர். வங்கதேசம் அணியின் பந்து வீச்சாளர் தாஜுல் இஸ்லாம் மற்றும் மெகிந்தி ஹாசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து, களம் இறங்கிய வங்கதேசம் அணி இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 150 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், அக்ஸார் படேல், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

வங்கதேசம் அணி பாலோ ஆன் ஆனபோதிலும், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல். ராகுல் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களம் இறங்கிய புஜாராவும், சுப்மன் கில்லும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தனர்.

110 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் மெகிந்தி ஹசன் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். புஜாரா 102 ரன்கள் எடுத்ததும் இந்திய அணி டிக்ளேர் செய்தது. அப்போது, வீரட் கோலி 19 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 61.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை வங்கதேசம் அணிக்கு இந்திய அணி நிர்ணயித்தது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணியின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 42 ஆக இருந்தபோது மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து, இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்றது. வங்கதேசம் அணியின் தொடக்க வீரரான சான்டோ 67 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும், ஜாஹிர் ஹசன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர், 100 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு களம் இறங்கியவர்களில் சாகிப் அல் ஹசன் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 40 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் அக்ஸார் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்னும், ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், 90 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்தால் மட்டுமே வங்கதேசம் அணியால் வெற்றி பெற முடியும். ஆனால், அந்த அணியின் கைவசம் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே வங்கதேசம் அணியால் டிரா செய்ய முடியும்.

வங்கதேசம் அணியின் திணறல் ஆட்டத்தால் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு