பாகிஸ்தானில் 17 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

பாகிஸ்தானில் 17 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
X
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 17 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முல்தானில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 281 ரன்களும், பாகிஸ்தான் அணி 202 ரன்களும் எடுத்தன.

79 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 64.5 ஓவர்களில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.. ஹாரி புரூக் தனது 2-வது சதத்தை எட்டிய நிலையில் 108 ரன்களில் (149 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆனார். பென் ஸ்டோக்ஸ் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அந்த அணி கடைசி 19 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

முதல் இன்னிங்சில் 7 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த பாகிஸ்தான் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

முதல் இன்னிங்ஸ் முன்னிலையும் சேர்த்து பாகிஸ்தானுக்கு 355 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணியில் இரண்டாவது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த முகமது ரிஸ்வானும், அப்துல்லா ஷபிக்கும் முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் எடுத்தனர். ரிஸ்வான் 30 ரன்களிலும், அப்துல்லா ஷபிக் 45 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் பாபர் அசாம் (1 ரன்) ஆலி ராபின்சனின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

3-ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 64 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 198 ரன்கள் சேர்த்திருந்தது. சாத் ஷகீல் 54 ரன்களுடனும், பஹீம் அஷ்ரப் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இன்று நடைபெற்ற 4வது நாள் ஆட்டத்தில் மேற்கொண்டு ஆடிய சாத் ஷகீல் சதத்தை நெருங்கிய வேளையில் 94 ரன்னில் ஆட்டம் இழந்தார். பஹீம் அஷ்ரப் 10 ரன்னிலும், முகமது நவாஸ் 45 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து பாகிஸ்தான் அணியில் சல்மான், அபார் அகமது ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் அதிரடியாக மட்டையை சுழற்றிய அபார் அகமது முதல் 11 பந்துகளில் 4 பவுண்டரிகளை அடித்து அசத்தினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிரடியாக ஆடிய அபார் அகமது 17 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் புகுந்த மக்மூத் ரன் எடுக்காமல் அவுட் ஆனார்.

அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட போது பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் அந்த அணி 102.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 328 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. 17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி அங்கு வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!