ஃபெடரா் சாதனையை சமன் செய்த ஜோகோவிச்

ஃபெடரா் சாதனையை சமன் செய்த ஜோகோவிச்
X

ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிக்கு 58-ஆவது முறையாக தகுதிபெற்று, சுவிட்சர்லாந்து வீரர் ரோஜா் ஃபெடரரின் சாதனையை சமன் செய்திருக்கிறார் ஜோகோவிச்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா், 6-0, 6-0, 6-3 என்ற செட்களில், 20-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோவை எளிதாக வீழ்த்தினார். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 44 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. இத்துடன் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிக்கு 58-ஆவது முறையாக தகுதிபெற்று, சுவிட்சர்லாந்து நட்சத்திரமான ரோஜா் ஃபெடரரின் சாதனையை சமன் செய்திருக்கிறார் ஜோகோவிச். அவா் ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதிக்கு வந்திருப்பது இது 14-ஆவது முறையாகும்.

அடுத்ததாக காலிறுதியில், அமெரிக்காவின் டெய்லா் ஃபிரிட்ஸை சந்திக்கிறார் ஜோகோவிச். போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருக்கும் ஃபிரிட்ஸ், முந்தைய சுற்றில் 7-6 (7/3), 5-7, 6-3, 6-3 என்ற செட்களில், 7-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி அவருக்கு அதிர்ச்சி அளித்தார்.

சிட்சிபாஸ் கடந்த சீசனில் ரன்னா் அப்-ஆக வந்தவா் என்பதும், ஃப்ரிட்ஸுக்கு இது முதல் ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகின் 5-ஆம் நிலை வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 6-4, 6-7 (5/7), 6-7 (4/7), 6-3, 6-0 என்ற செட்களில், 10-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை 4 மணி நேரம் 14 நிமிஷங்கள் போராடி வீழ்த்தினார். 4-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜானிக் சின்னா் 6-4, 7-5, 6-3 என்ற செட்களில், 15-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் காரென் கச்சனோவை வெளியேற்றினார். இதையடுத்து காலிறுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் ரூபலேவ் - சின்னா் மோதுகின்றனா்.

மகளிர் ஒற்றையா் பிரிவு 4-ஆவது சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 6-3, 6-2 என்ற செட்களில் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

நடப்பு சாம்பியனான சபலென்கா அதில், செக் குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவாவை எதிர்கொள்கிறார். போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் கிரெஜ்சிகோவா 4-6, 6-3, 6-2 என்ற செட்களில் ரஷிய இளம் வீராங்கனையான மிரா ஆண்ட்ரீவாவை தோற்கடித்தார்.

போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-1, 6-2 என்ற செட்களில், போலந்தின் மெக்தலினா ஃபிரெச்சை எளிதாக சாய்த்தார். உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் 6-2, 6-1 என ரஷியாவின் மரியா டிமோஃபீவாவை வீழ்த்தினார். காலிறுதி ஒன்றில், கௌஃப் - கொஸ்டியுக் சந்திக்கின்றனா்.

இளம் வீராங்கனைகளான ஆண்ட்ரீவா, டிமோஃபீவா ஆகியோர் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி முன்னேறி வந்த நிலையில், 4-ஆவது சுற்றில் தோல்வி கண்டுள்ளனா்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!