கிரிக்கெட் வர்ணனையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.. அஜய் ஜடேஜா, கனிட்கர் குறித்து பெருமிதம்..

கிரிக்கெட் வர்ணனையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.. அஜய் ஜடேஜா, கனிட்கர் குறித்து பெருமிதம்..
X

பாலாஜி, பத்ரிநாத், லோகேஷ் கனகராஜ்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியின் தமிழ் வர்ணனையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு தனது கிரிக்கெட் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை வென்று பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. ஆனால், அந்த இலக்கை விக்கெட் இழப்பின்றி அடைந்து இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் எளிதாக நுழைந்தது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் தமிழ் வர்ணனையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த், பத்ரிநாத், அபிநவ் முகுந்த் உள்ளிட்டோரும், நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, பாவனா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். தமிழ் ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாக திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜியும் தமிழ் வர்ணனையில் இன்று இணைந்து கொண்டார்.

இந்தப் போட்டியின் தமிழ் வர்ணனையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சில நிமிடங்கள் மட்டுமே கலந்து கொண்டு தனது கிரிக்கெட் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். சிறு வயதில் கோவையில் நடைபெற்ற கண்காட்சி கிரிக்கெட் போட்டியை நேரடியாக பார்த்ததாகவும், அந்தப் போட்டியில் டெண்டுல்கர் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

கிரிக்கெட் வர்ணனையின்போது, நடிகர் ஆர்.ஜே. பாலாஜி பல்வேறு கேள்விகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜியிடம் எழுப்பினார். குறிப்பாக, விஜய் நடிக்க உள்ள தளபதி 67 குறித்து அப்டேட் கேட்டதற்கு உரிய நேரத்தில் அப்டேட் வழங்கப்படும் என லோகேஷ் கனகராஜ் நழுவிக் கொண்டார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜாவின் சிகை அலங்காரமும், தற்போது வீரட் கோலியின் சிகை அலங்காரமும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்த லோகேஷ் கனகராஜ், மறக்க முடியாத போட்டியாக கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் சுதந்திரக் கோப்பை போட்டியை நினைவு கூர்ந்தார்.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 314 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, 48 ஓவர்களுக்கு 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தபோது கடைசியில் 2 பந்துகளுக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

அப்போது, பேட் செய்த ரிஷிகேஷ் கனிட்கர் பாகிஸ்தான் வீரர் சாக்லைன் முஸ்டாக் வீசிய பந்தை பவுண்ட்ரிக்கு விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். அந்த ஒரு பவுண்ட்ரி மூலம் தொடர்ந்து அணியில் ரிஷிகேஷ் கனிட்கர் தன்னை தக்க வைத்துக் கொண்டார்.

இந்தப் போட்டியை வீட்டில் இருந்து அனைவரும் குடும்பத்துடன் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், இந்தியா வெற்றி பெற்றதும் தனது தந்தையை உறவினர்கள் அனைவரும் தோளில் தூக்கியதால் அவரது கையில் மின்விசிறி தாக்கியதால் காயம் ஏற்பட்டதாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வர்ணனையின்போது தெரிவித்தார்.

தன்னால் மறக்க முடியாத கிரிக்கெட் வீரர் என்றால் அது ரிஷிகேஷ் கனிட்கர் தான் என்றும் அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அன்று அடித்த பவுண்ட்ரியால் இன்று வரை பேசப்படுகிறார் என்றும் லோகேஷ் கனராஜ் தெரிவித்தார். மேலும், யுவராஜ் சிங், முகமது கைப் ஆகியோரின் விளையாட்டுகள் குறித்தும், நாட் வெஸ்ட் போட்டியின்போது லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி வெற்றியின் போது, அப்போதைய கேப்டன் கங்குலி தனது சட்டையை கழற்றிய நினைவுகளையும் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து கொண்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!