உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் தோல்விக்கான காரணங்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் தோல்விக்கான காரணங்கள்
X

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வென்ற ஆஸ்திரேலியா

அணி தேர்வு தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டாலும், கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மனநிலையில் இந்தியா விளையாடவில்லை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்த நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மீதும், அணியின் தேர்வு குறித்தும், டாஸ் முடிவு குறித்தும் என பல்வேறு விவகாரங்களில் கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. இப்போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்று சாதனை படைத்தது. இந்திய அணி படுதோல்வியடைந்தது.

தோல்விக்கான முக்கிய காரணங்களாக கூறப்படும் அம்சங்கள்:-

டாஸ்: லண்டன் ஓவல் மைதானத்தில் போட்டி நடைபெற்ற நிலையில் அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பந்து வீச்சை தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அஸ்வினுக்கு இடமில்லை: உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்படாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மைதானத்தின் முதல்நாள் சூழ்நிலையை பொறுத்து அஸ்வினுக்கு பதில் உமேஷ் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியில் அதிக இடதுகை பேட்ஸ்மென்கள் இருந்த நிலையில் அஸ்வினுக்கு அணியில் இடம் அளிக்கப்படாதது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. குறிப்பாக முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய இடது கை பேட்ஸ்மென் ஹெட் அதிரடியாக ஆடி 163 ரன்கள் குவித்தார். அந்த ஆட்டமே இந்திய அணியின் தோல்விக்கு பெரும் பங்காற்றியது.

ஆஸ்திரேலிய பேட்டிங்: ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி ஸ்மித் மற்றும் ஹெட் கூட்டணியால் வலுப்பெற்றது.

ஸ்மித் 121 ரன்களும், ஹெட் 163 ரன்களும் குவித்தனர். அவர்களது விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் தடுமாறினர். இதனால் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது.

ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர்: இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளராக ஜடேஜா மட்டுமே இடம்பெற்றிருந்தார். தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த மைதானம் பின்னர் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக மாறத்தொடங்கியது. மைதானத்தில் சுழற்பந்து வீச்சு சற்று கணிக்க முடியாததாக இருந்தது. ஆனால் இந்திய அணியில் ஜடேஜா மட்டுமே இருந்ததால் அவர் அவரது ஓவரை கவனமுடன் ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் வேகப்பந்து வீச்சை பதம் பார்த்தனர்.

இந்திய வேகப்பந்து வீச்சு: இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை ஆஸ்திரேலிய வீரர்கள் பிளந்து கட்டினர். சிஜராஜ், ஷமி, உமேஷ், ஷர்துல் என அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களின் ஓவரிலும் ரன்கள் மளமளவென வந்தன

இந்திய வீரர்களின் மோசமான பேட்டிங்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 468 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருந்ததாக தெரியவில்லை. ஆனால், இந்திய அணியின் மோசமான பேட்டிங் காரணமாகவே முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

2வது இன்னிங்ஸ்: ஆஸ்திரேலியா பொறுப்பான ஆட்டம்:

2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தது. 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்த நிலையில் இருந்த ஆஸ்திரேலியா பின்னர் மெல்ல சரிவில் இருந்து மீண்டது. 6 விக்கெட்டுகளுக்கு 167 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. ஆனால், 7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹெரி, மிச்செல் ஸ்டார்க் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆட்டத்தின் 4வது நாளான நேற்று பந்து வீச்சு சுழற்பந்துக்கு சாதகமாக இருந்தபோதும் இந்திய அணியில் போதிய சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாததும் இந்த ஜோடி ரன் குவிக்க காரணமானது. அலெக்ஸ் 66 ரன்களும், ஸ்டார்க் 41 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இந்திய அணி வெற்றிபெற 444 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்று மாலை இந்தியா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

444 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர்கள் ரோகித், கில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடத்தொடங்கினர். 4ம் நாள் ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய பேட்ஸ்மென்கள் மைதானத்தின் தன்மையை கணிக்க தவறிவிட்டனர். கில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிரீனிடம் சர்ச்சைக்குரிய வகையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

60 பந்துகளில் 43 ரன்கள் என ஒருநாள் போட்டியில் விளையாடுவது போல் அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லயன் பந்து வீச்சில் எல்பிடபுல்யூ முறையில் அவுட் ஆனார்.

சுழற்பந்து வீச்சுக்கு மைதானத்தின் எவ்வாறு ஒத்துழைக்கிறது? என்பதை கணிக்காமல் தொடர்ந்து அதிரடியாக ஆட வேண்டும் என எண்ணிய ரோகித் லயன் சுழலில் சிக்கிக்கொண்டார்.

நடப்பு இந்திய அணியின் சுவர் என அழைக்கப்படும் புஜாரா தனது வழக்கமான ஆட்டத்திற்கு மாறாக வித்தியாசமாக ஷாட் ஆட முயற்சித்து 18 ரன்னில் அவுட் ஆன நிகழ்வு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தியா 95 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில் அடுத்து வந்த விராட் கோலி, ரஹானே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 4ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. விராட் கோலி 44 ரன்களுடனும், ரஹானே 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆட்டத்தின் கடைசி நாளான இன்று இந்தியா வெற்றிபெற 280 ரன்கள் தேவைப்பட்டது. 7 விக்கெட்டுகள் கைவசம் இருந்தன. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணி வெற்றி முனைப்பில் இருந்தது.

விராட் கோலி 49 ரன்கள் எடுத்திருந்தபோது போலண்ட் பந்து வீச்சில் சிலிப்பில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அவரது விக்கெட் இந்திய அணியின் தோல்விக்கு பெரும் பின்னடைவாக ஏற்பட்டது.

விராட் கோலி விக்கெட் வீழ்ந்த உடன் ஜடேஜா களமிறங்கிய நிலையில அவர் 2வது பந்திலேயே அவுட் ஆனார். அதன் பின்னர் ரஹானேவும் 46 ரன்னில் அவுட் ஆனார்.

கோலி அவுட் ஆன உடன் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் இருந்து தோல்வியை தவிர்க்க வேண்டும் என்ற மனநிலையில் இந்திய வீரர்கள் சற்று கவனமுடன் விளையாடியிருக்கலாம். மோசமான ஷாட்கள் ஆடியதன் விளைவாக இந்திய பேட்டிஸ்மென்களின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்கியது முதல் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடியது தெளிவாக தெரிந்தது. ஆனால், இந்திய அணி முதல் இன்னிங்சில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தது மட்டுமின்றி ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களை கட்டுப்படுத்த எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

குறிப்பாக ஹெட் விக்கெட்டை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் சற்றும் முயற்சிக்கவில்லை. ஸ்டீவ் ஸ்மித்தை பொறுத்தவரை அவரது விக்கெட்டை வீழ்த்துவது சற்று கடினமான செயல் தான். ஆனால், இடது கை பேட்ஸ்மென் ஆன ஹெட் ஷாட்பிச் பந்துவீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சை பலவீனமாக கொண்டவர்.

அவரது பலவீனத்திற்கு ஏற்றார் போல் பந்து வீசாமல் உமேஷ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக ஓவர்கள் கொடுக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியை அதிக ரன்கள் அடிக்க விட்டது, டாஸ் வென்றும் முதலில் பேட்டிங் செய்யாதது, அணி தேர்வு தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டாலும், கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மனநிலையில் இந்தியா விளையாடவில்லை என்பது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் முழுமையாக வெளிப்பட்டதை பார்க்க முடிகிறது. இத்தகையே காரணிகளே இந்தியாவின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!