உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை நாளை பழி தீர்க்குமா இந்தியா?
உலக கோப்பை கிரிக்கெட் 2023 ஐ வெல்லும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள்.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி பழி தீர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து ,பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, வங்காளதேசம் உட்பட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் என்ற விளையாட்டு விதியின் அடிப்படையில் லீக் போட்டிகள் நடைபெற்று வந்தன. அந்த வகையில் லீக் போட்டி இறுதியாக தீபாவளி அன்று இந்திய அணி நெதர்லாந்து அணியுடன் மோதியதுடன் நிறைவு பெற்றது .
இந்திய அணி தன்னுடன் மோதிய 9 அணிகளையும் வீழ்த்தி வெற்றிவாகை சூடி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதுடன் ரன் ரேட்டிலும் அதிக இடத்தில் உள்ளது.இது தவிர தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் 3 மற்றும் நான்காவது இடத்திலும் உள்ளன.
இந்த நான்கு அணிகளும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டன. மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு பகல் இரவு ஆட்டமாக தொடங்குகிறது.
இந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா மீண்டும் சாம்பியன் ஆகியே தீர வேண்டும் என்ற வெறியுடன் களம் இறங்கும். அதே நேரத்தில் இரண்டு முறை அரையிறுதி போட்டியுடன் வெளியேறிய நியூசிலாந்து இம்முறை இறுதிப் போட்டிக்கு எப்படியும் தொகுதி பெற வேண்டும் என்று மூர்க்கத்தனத்துடன் விளையாடும்.ஆதலால் இந்த போட்டி மிகவும் ஆவலுடன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இதே இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் தான் மோதின. அதில் நியூசிலாந்து அணி இந்தியாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இங்கிலாந்திடம் தோல்வியை தழுவி வெளியேறியது.
உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணியை இந்தியா வென்றதே இல்லை என்ற ஒரு பழிச்சொல்லை லீக் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி அந்த களங்கத்தை துடைத்தெறிந்தது. ஆனால் கடந்த உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியதால் அதற்கு பழி தீர்க்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் உள்ளது. ஆதலால் நாளைய போட்டி இந்திய ரசிகர்களால் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாநிலங்களில் தற்போது வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக மழை பெய்து வரும் சூழலில் மராட்டிய மாநிலத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் நாளைய போட்டி மழையால் தடை படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu