உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய அயர்லாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இங்கிலாந்தை வீழ்த்திய அயர்லாந்து
X

இங்கிலாந்து அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் அயர்லாந்து அணி வீரர்கள்.

Cricket World Cup News -உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை அயர்லாந்து அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

Cricket World Cup News -2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, வெஸ்ட் இன்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட 16 அணிகள் போட்டியில் பங்கேற்ற நிலையில், வெஸ்ட் இன்டீஸ், நமீபியா, யுஏஇ, ஸ்காட்லாந்து ஆகிய நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறின.

20 ஓவர் கிரிக்கெட் போட்டி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதை நிரூபிக்கும் வகையில், முதல் போட்டியில் ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அணி வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. தொடர்ந்து, இரண்டாம் நாள் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இன்டீஸ் அணியை வீழ்த்தியது. கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற மற்றொரு முக்கிய ஆட்டத்தில் அயர்லாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இன்டீஸ் அணியை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இன்டீஸ் அணி பரிதாபமான நிலையில் போட்டியில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில், 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உலக சாம்பியான இங்கிலாந்து அணியும், வளர்ந்து வரும் அயர்லாந்து அணியும் மோதும் ஆட்டம் மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மழை குறுக்கிட்டதால் இந்த ஆட்டத்தின் முடிவு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியது. இருப்பினும் சிறிது நேரத்திலேயே மழை குறைந்து போட்டி மீண்டும் தொடங்கியது.

தொடக்கம் முதலே அடித்து ஆடத் தொடங்கிய அயர்லாந்து வீரர்களில் தொடக்க வீரரான ஆண்ட்ரூ பல்பிரைன் 47 பந்துகளை சந்தித்து 62 ரன்கள் குவித்தார். லோர்கன் டூக்கர் 27 பந்துகளில் 34 ரன்களை விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 19.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அயர்லாந்து அணி 157 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் லைம் லிவிங்ஸ்டன், மார்க் வுடன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மழை பெய்யக் கூடும் என்பதால் தங்களது வெற்றியை பாதித்துவிடக் கூடாது என்பதை அறிந்த இங்கிலாந்து வீரர்கள் ஆட்டம் தொடங்கியது முதலே அடித்து ஆடத் தொடங்கினர். இதுவே அவர்களுக்கு இழப்பாக அமைந்தது என்றே கூறலாம். தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் ரன் ஏதும் எடுக்காமலும், அலெக்ஸ் ஹலீஸ் 7 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஓரளவு நிலைத்து ஆடிய மலன் 35 ரன்கள் குவித்தார்.

14.3 ஓவர்களில் திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையெடுத்து, தொடர்ந்து போட்டியை நடத்த முடியாத நிலையில், டக்ஸ் வோர்த் லீவிஸ் விதியின் படி 14.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 110 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த அணி 105 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அயர்லாந்து அணியின் ஆண்ட்ரூ பல்பிரைன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
Weight Loss Tips In Tamil