உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கையை 55 ரன்களில் சுருட்டி வீசி இந்தியா அபார வெற்றி
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உட்பட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை லீக் போட்டியில் விளையாடி வெற்றி பெற வேண்டும். இந்த லீக் தொடரில் முதல் 4 இடங்களை பெறும் பணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி வரும். அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்பது இந்த விளையாட்டின் விதிமுறை ஆகும்.
அந்த வகையில் இந்தியா இதுவரை பங்கேற்ற ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் இருந்தது. இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணி இருந்தது. இந்த நிலையில் புனேயில் நடந்த 32 ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணியை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதால் 12புள்ளிகள் மற்றும் அதிக ரன் ரேட்டிங் அடிப்படையில் முதலிடத்திற்கு முன்னேறியது.
இந்நிலையில் இன்று மும்பை வாங்கடே மைதானத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதும் 33வது லீக் போட்டி பகல் இரவு ஆட்டமாக தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி இந்திய அணியை பேட்டிங் செய்யும்படி பணித்தது.
இதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனாலும் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அதிரடி நாயகர்கள் விராட் கோலி, சுப்மன் கில் இலங்கை அணியின் பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கும் சிக்சருக்கும் விளாசினார்கள். இதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் 200 ஐநோக்கி உயர்ந்து கொண்டிருந்தது. யார் முதலில் சதம் அடிப்பார்கள் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் 92 ரன்கள் எடுத்திருந்த போது கில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து கோலி 88 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின்னர் களம் இறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் தனது பங்கிற்கு 82 ரன்களை குவித்தார். கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோரும் தங்களது பங்கிற்கு ரன்களை எடுத்தனர். இறுதியாக இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களை குவித்தது.
368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை பந்தடிக்க தொடங்கியது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் முதல் பந்திலேயே இலங்கையின் முதல் விக்கெட் காலியானது. அடுத்து சிராஜின் பந்தில் தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன. ஒரு கட்டத்தில் இலங்கை அணி எடுத்த ஒற்றை இலக்க ரன்களை விட விக்கெட்டின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. முதல் 4 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டிருந்த நிலையில் 7 ரன்களே எடுத்து இலங்கை அணி பரிதாபமாக காட்சி அளித்தது.
இதனை தொடந்து முகமது ஷமி அடுத்தடுத்து வீசிய இரண்டு பந்துகளில் தொடர்ச்சியாக இலங்கை தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இப்படி இலங்கையின் விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல் தொடர்ச்சியாக சரிந்து கொண்டே இருந்தன.
இறுதியாக இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை சுருட்டிவீசி இமாலய வெற்றியை பதிவு செய்தது.
உலக கோப்பை கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணியை மிக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்தியா பதிவு செய்து உள்ளது. இதன் மூலம் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்து இருப்பதுடன் அரை இறுதி போட்டியிலும் தேர்வான முதல் அணி என்ற பெருமையை பெற்று உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu