உலக கோப்பை கிரிக்கெட்: வங்காள தேசத்தை விரட்டி அடித்து இந்தியா வெற்றி
சதம் அடித்த மகிழ்ச்சியில் விராட் கோலி.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வங்காளதேசத்தை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்று உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கியது. இது 13 வது உலகக்கோப்பை போட்டி திருவிழா ஆகும். இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து உட்பட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இந்த போட்டியில் அதிக புள்ளி பெறும் நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். அரையிறுதி போட்டியில் தேர்வாகும் 2 அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணிக்கு உலகக்கோப்பை வழங்கப்படும். இதுதான் போட்டியின் விதிமுறை ஆகும்.
இந்தியா இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளது. இந்த நிலையில் உலக கோப்பை போட்டியின் 17 வது லீக் போட்டி இன்று மராட்டிய மாநிலம் புனேயில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவும் வங்காளதேச அணியும் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது.
பங்களாதேஷ் அணியினர் நிதானமாக ஆடினர். தொடக்க ஆட்டக்காரர்கள் அதிக ரன்களை குவித்தனர். இந்த நிலையில் அவர்கள் 70 ரன்களுக்கு மேல் எடுத்த போது முதல் விக்கட்டை இழந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்களும் நிதானமாக விளையாடியதால் அந்த அணி 50ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவும், அதிரடி ஆட்டக்காரர் சுப்மன் கில்லும் இறங்கினார்கள். இந்த ஜோடியினர் முதல் 10 ஓவர்களிலேயே ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 88 வது ரன் எடுத்திருந்தபோது கேப்டன் ரோகித் சர்மா தனது 48வது ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து சுப்மன் கில்லும் 50 ரன்கள் தாண்டிய நிலையில் அவுட் ஆனார். இந்த நிலையில் மூன்றாவது வீரராக களம் இறங்கிய விராட் கோலியும் ஸ்ரேயஸ் அய்யரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஸ்ரேயஸ் அய்யர் அவுட்டானதை தொடர்ந்து கே.எல் ராகுல் களம் இறங்கினார்.
இந்த ஜோடியினர் இறுதிவரை நின்று இந்தியாவின் வெற்றிக்கு தேவையான 257 ரன்களை 41.3 ஓவர்களில் எளிதாக எடுத்தனர். அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி 103 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்தியா வங்காள தேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது. வங்காளதேசத்தை வீழ்த்தியதன் மூலம் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. புள்ளி பட்டியலிலும் தொடர்ந்து இரண்டாவது இடத்தை அலங்கரித்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu