உலகக்கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவிடம் சரணடைந்த இங்கிலாந்து
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, இப்போது ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் (ODI) அதன் உலகக் கோப்பை வரலாற்றிலும் அதன் மிகப்பெரிய தோல்வியாகும்.
மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 போட்டியில் 400 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 20-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.
உடல்நலக்குறைவு காரணமாக கேப்டன் பவுமா இந்த ஆட்டத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதில் மார்க்ரம் கேப்டனாக செயல்பட்டார். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக்கும், ஹெண்ட்ரிக்ஸ்சும் களமிறங்கினர்.
டி காக் முதல் ஓவரிலேயே அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். எனினும், ஹெண்ட்ரிக்ஸ்- வான் டர் டசன் ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் அரைசதம் அடித்த நிலையில், வான்டர் டசன் 60 ரன்களிலும், ஹெண்ட்ரிக்ஸ் 85 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் மார்க்ரம் தன் பங்குக்கு 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடக்கத்தில் நிதானமாக விளையாடிவந்த கிளாசன், அரைசதம் கடந்த பின்னர் ருத்ர தாண்டவமாடினார். பந்துகளை நாலாபுறமும் பவுண்டரிக்கு விரட்டிய அவர், சதம் அடித்து அசத்தினார். அவர் 67 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுபுறம், கிளாசனுக்கு இணையாக மார்கோ யான்செனும் அதிரடி காட்டினார். அவர் 42 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 75 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் டாப்லி 3 விக்கெட்டுகளும், ரஷித், அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், ப்ரூக் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளதால், பெரிய இலக்காக இருந்தாலும் ஆட்டம் விறுவிறுப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் அபார பந்துவீச்சால் ஜானி பேர்ஸ்டோ (10), டேவிட் மலன் (6), ஜோ ரூட் (2), பென் ஸ்டோக்ஸ் (5), ஹாரி புரூக் (17), கேப்டன் ஜாஸ் பட்லர் (15) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர். இங்கிலாந்து அணி 100 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை முழுவதுமாக சரிந்தது.
எனினும், கடைசியில் அட்கின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் சில பவுண்டரிகளை விளாசினர். இந்த ஜோடி 34 பந்துகளில் 70 ரன்களை குவித்தது. அட்கின்சர் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்க் வுட் 17 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். காயம் காரணமாக டாப்லி களமிறங்கவில்லை.
இறுதியில் இங்கிலாந்து அணி 22 ஓவர்களில் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் கோட்சே 3 விக்கெட்டுகளையும், ரபாடா, இங்கிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணிக்கு இது மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. அத்துடன், ரன்ரேட்டும் மிகப்பெரிய அளவில் சரிந்ததால், புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்தின் மிகப்பெரிய தோல்விகள் (ரன் வித்தியாசத்தில்)
1) 2023ல் மும்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 229 ரன்கள்
2) 2022 இல் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 221 ரன்கள்.
3) 2018 இல் கொழும்பில் இலங்கைக்கு எதிராக 219 ரன்கள்.
4) 1994 இல் கிங்ஸ்டவுனில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 165 ரன்கள்.
5) 1999 இல் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 162 ரன்கள்.
உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்தின் மிகப்பெரிய தோல்வி இதுவாகும்.
உலகக் கோப்பைகளில் இங்கிலாந்தின் மிகப்பெரிய தோல்விகள் (ரன் வித்தியாசத்தில்)
1) 2023ல் மும்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 229 ரன்கள்
2) 1999 இல் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 122 ரன்கள்.
3) 2015 இல் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 111 ரன்கள்.
4) 1979 இல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 92 ரன்கள்.
5) 2003ல் டர்பனில் இந்தியாவுக்கு எதிராக 82 ரன்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu