கிரிக்கெட்: மேக்ஸ்வெல்லின் நுட்பமான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

கிரிக்கெட்: மேக்ஸ்வெல்லின் நுட்பமான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
X

கடைசி பந்தை பவுண்டரிக்கு விளாசிய மேக்ஸ்வெல்.

டி20 கிரிக்கெட் போட்டியில் மேக்ஸ்வெல்லின் நுட்பமான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட் முடிவுக்கு வந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் இடையே டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்கியது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணியின் இளம் நட்சத்திரங்கள் சூரியகுமார் யாதவ் தலைமையில் தொடர்ந்து இரண்டு வெற்றியை பெற்றிருந்த நிலையில் மூன்றாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் தலைநகர் கௌகத்தியில் நேற்று நடைபெற்றது.

இந்திய இளம் வீரர்கள் இந்த மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரை கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மேக்ஸ்வெல் என்ற ஒரு தனி மனிதன் இறுதி நேரத்தில் இந்திய அணி பெற இருந்த வெற்றியை தட்டிப் பறித்தார்.

நேற்றைய போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 123 ரங்களுடனும், திலக் வர்மா 31 ரன்களுனனும் களத்தில் இருந்தனர். கடைசி 3 ஓவர்களில் மட்டும் 62 ரன்களை எடுத்து இருந்தனர்.நடப்பு தொடரில் மூன்று ஆட்டங்களிலும் இந்தியா 200 ரன்னுக்கு மேல் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆக 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா அணிக்கு ஹெட் 35 ரன்கள் எடுத்து தடாலடியான தொடக்கம் தந்தார். ஆனாலும் ஒரு கட்டத்தில் 68 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்திற்கு உள்ளானது ஆஸ்திரேலிய அணி. இந்த நெருக்கடியான சூழலில் களம் இறங்கினார் ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல், அவர் தனக்கே உரிய நுட்பமான பாணியில் ஆடி அணியை நிமிர வைத்தார. மட்டையை நாலாபுறமும் சுழட்டினார். கடைசி இரு ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது .19-வது ஓவரை வீசிய அக்‌ஷர் பட்டேலின் ஓவரில் 22 எடுத்தனர். இதில் விக்கெட் கீப்பர் இசான் கிசான் பந்தை ஸ்டம்புக்கு முன்னால் வந்து பிடித்ததற்காக நோ பால் வழங்கப்பட்டு அந்த பந்தில் சிக்சர் அடிக்கப்பட்டதும் பைஸ் வகையில் பௌண்டரி விட்டதும் இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது.

இதையடுத்து கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 21 ரன்கள் தேவையாக இருந்தது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு அடித்த மேத்யூ வேட் அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு தூக்கிய மேக்ஸ்வெல் அடுத்த இரு பந்துகளை பவுண்டரிக்கு ஓடவிட்டதுடன் தனது நாலாவது சதத்தை நிறைவு செய்தார்.

கடைசி பந்தில் இரண்டு ரன் தேவைப்பட்டது. அந்த பந்தை மேக்ஸ்வெல் நேர்பகுதியில் சர்வ சாதாரணமாக பவுண்டரிக்கு விரட்டி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். ஆஸ்திரேலியா 20 ஓவர்களின் முடிவில்5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. மேக்ஸ்வெல் 104 ரன்கள் உடனும் மேத்யூ வேட் 28 ரன்கள் உடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்திய அணி எளிதாக வெற்றி பெற இருந்த நிலையில் ஆட்டத்தின் போக்கையை மாற்றி காட்டினார் மேக்ஸ்வெல்.

உலகக்கோப்பை போட்டியின் போதும் இதே போல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் தோல்வி அடையும் நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணியை தனி ஒரு மனிதனாக நின்று வெற்றி பெற வைத்தவர் மேக்ஸ்வெல். அந்த போட்டியில் அவர் 234 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்