3 ஆவது ஒருநாள் போட்டி ரத்து.. இந்தியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து...

3 ஆவது ஒருநாள் போட்டி ரத்து.. இந்தியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து...
X

தொடரை வென்ற மகிழ்ச்சியில் நியூஸிலாந்து வீரர்கள்.

இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், ஒருநாள் போட்டித் தொடரை நியூஸிலாந்து அணி கைப்பற்றியது.

நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரை 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று கைப்பற்றியது. ஹர்திக் பாண்டியா தலைமையில் பங்கேற்ற இந்திய அணியின் 360 டிகிரி வீரர் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி தொடர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

தொடர்ந்து, மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது. கேப்டன் ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஸ் அய்யர் அதிகபட்சமாக 80 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து, 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்ய தொடங்கிய நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும், விக்கெட் கீப்பர் டாம் லாதமும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், 47.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்களை குவித்த நியூஸிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி ஹேமில்டன் நகரில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. தொடர் மழை காரணமாக நேரத்தை கணக்கில் கொண்டு 29 ஓவர் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 13 ஆவது ஓவரில் இந்தியாவின் ஸ்கோர் 89 ஆக இருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, மழை பெய்ததால் போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே போட்டித் தொடரை சமன் செய்ய முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி களம் இறங்கியது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருப்பினும், நியூஸிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இந்திய அணி 47.3 ஓவரில் 219 ரன்ககளுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில், வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 51 ரன்களை குவித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 49 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நியூஸிலாந்து அணி தரப்பில் ஆடம் மிலேன், மிட்சேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

தொடர்ந்து களம் இறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களான பின் ஆலன், கன்வே ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 16.3 ஆவது ஓவரில் உம்ரான் மாலிக் வீசிய பந்தில் 57 ரன்கள் எடுத்திருந்த பின் ஆலன் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையெடுத்து, நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். ஆனால், 18 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் போட்டி கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது.

மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலையில் இருந்ததால் அந்த அணி தொடரை கைப்பற்றியது. தொடர் நாயகனாக நியூஸிலாந்து அணியின் டாம் லாதம் தேர்வு செய்யப்பட்டார்.

20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மொத்தம் நடைபெற்ற 6 போட்டிகளில் இரண்டு போட்டிகள் மட்டுமே முழுமையாக நடைபெற்றது. மற்ற போட்டிகள் மழையால் தடைபட்டதால், இந்தத் தொடரில் மழை மட்டுமே அதிகம் விளையாடியதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!