பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி பாராட்டினார் முதல்வர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.04.2022) தலைமைச் செயலகத்தில், 71-வது தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில், தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு ஆண்கள் அணிக்கு 30 இலட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாடு பெண்கள் அணிக்கு 12 இலட்சம் ரூபாயும், என் மொத்தம் 42 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு அரசின் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கினார்.
இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் சார்பில் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் 2022 போட்டிகள் 3.04.2022 முதல் 10.04.2022 வரை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் 32- மாநிலங்களைச் சார்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்றதில் 31- அணிகள் தகுதி பெற்றன. இதில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் கலந்து கொண்டன.
10.4.2022 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி, பஞ்சாப் அணியை எதிர்கொண்டு விளையாடியதில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வென்றது.
பெண்கள் பிரிவில் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில், தமிழ்நாடு பெண்கள் அணி கேரளாவை எதிர்கொண்டு விளையாடியதில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
71-வது தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தேசிய அளவில் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை பாராட்டி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உயரிய ஊக்கத்தொகையாக, தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு ஆண்கள் கூடைப்பந்து அணியை சேர்ந்த 12 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.2.50 இலட்சம் வீதம், 30 இலட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாடு பெண்கள் கூடைப்பந்து அணியை சேர்ந்த 12 வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம் 12 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 42 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்கள். மேலும், அணிகளின் வெற்றிக்காக அயராது உழைத்த பயிற்சியாளர்கள் மற்றும் கூடைப்பந்து சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர் இரா. ஆனந்தகுமார், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத் தலைவரும், இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு துணைத் தலைவரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயாளருமான ஆதவ் அர்ஜுனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu