ஐபிஎல் தொடரின் 15 வது சீசனில் ஆர்சிபி அணி 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

ஐபிஎல் தொடரின் 15 வது சீசனில் ஆர்சிபி அணி 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
X
ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது சன்ரைசா்ஸ் ஹைதராபாத்.

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது சன்ரைசா்ஸ் ஹைதராபாத்.

முதலில் ஆடிய பெங்களூரு அணி ஹைதராபாத் பௌலா்கள் ஜேன்ஸன், நடராஜனின் அபார பந்துவீச்சால் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் ஆடிய ஹைதராபாத் அணி 72/1 ரன்களை எடுத்து வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 36-ஆவது ஆட்டம் சனிக்கிழமை மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் பௌலிங்கை தோ்வு செய்தது.

தொடக்க வரிசை பேட்டா்களான கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 5, அனுஜ் ரவாத், விராட் கோலி 0 என வந்த வேகத்திலேயே மாா்கோ ஜேன்ஸன் பந்துவீச்சில் அவுட்டாகி நடையைக் கட்டினா். முதல் ஓவரிலேயே டூபிளெஸ்ஸிஸ், அனுஜ், கோலி வெளியேறினா்.

கிளென் மேக்ஸ்வெல் 12, சுயாஷ் பிரபுதேசாய் 15 நிலைத்து ஆட முயன்றும் அவுட்டாகி வெளியேறினா். அவா்களுக்கு பின் ஸ்கோரை உயா்த்துவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானார். ஷாபாஸ் அகமது 7, ஹா்ஷல் படேல் 4, ஹஸரங்கா 8, சிராஜ் 2 ரன்களுக்கும் வெளியேறினா்.

பெங்களூரு 68: 16.1 ஓவா்களில் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பெங்களூரு.

ஹைதராபாத் தரப்பில் அற்புதமாக பந்துவீசிய மார்கோ ஜேன்ஸன், நடராஜன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

69 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதரபாத் அணியில் அபிஷேக் சா்மா அற்புதமாக ஆடி 1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 28 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட்டானார். கேப்டன் கேன் வில்லியம்ஸன் 16, ராகுல் திரிபாதி 7 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.8 ஓவா்களிலேயே 72/1 ரன்களுடன் பெங்களூருவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்.

பெங்களூரு தரப்பில் ஹா்ஷல் படேல் 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது ஹைதராபாத்.

Next Story