பாக். ஆஸி டெஸ்ட் தொடர்: தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா

பாக். ஆஸி டெஸ்ட் தொடர்: தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா
X
கடைசி டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் நடந்த முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 3ம் தேதி தொடங்கியது . இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 77.1 ஓவர்களில் 313 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ரிஸ்வான் 88 ரன்களும் , அமீர் ஜமால் 82 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 109.4 ஓவர்களில் 299 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லபுசேன் 60 ரன்களும் , மிச்சேல் மார்ஷ் 54 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய அமீர் ஜமால் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 14 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் அப்துல்லா ஷபீக், ஷான் மசூத் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.பின்னர் சைம் அயூப், பாபர் அசாம் இணைந்து சிறப்பாக விளையாடினர். சைம் அயூப் 33 ரன்களிலும் , பாபர் அசாம் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சவுத் ஷகீல் 2 ரன்களுடனும் , சஜித் கான் , ஆகா சல்மான் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர் . இதனால் நேற்று 3வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது.

இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 43.1 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி ஆட்டமிழந்தது . இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் , லபுசேன் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது. இந்த வெற்றியின்மூலம் டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!