திருச்சி கிரிக்கெட் ரசிகர்கள் வடிவமைத்த 15 அடி உயர மாதிரி உலக கோப்பை
திருச்சி கிரிக்கெட் ரசிகர்களின் உழைப்பில் உருவான மாதிரி உலக கோப்பை.
இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநில மக்களையும் இணைக்கும் ஒரு விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. வெள்ளைக்காரன் கண்டு பிடித்த கிரிக்கெட் விளையாட்டு இப்போது அவனது கையை மீறி இந்தியா போன்ற நாடுகளின் தேசிய விளையாட்டு போல் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.
உலக அளவில் சில நாடுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாடி வந்தாலும் உலகம் முழுவதும் அதற்கு ரசிகர்கள் அதிகம். தற்போதைய கால கட்டத்தில் ஆண்டு முழுவதும் நாடுகளுக்கு இடையே சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் டெஸ்ட் மேட்ச், ஐம்பது ஓவர் ஒரு நாள் போட்டி, இருபது ஓவர் டி 20 கிரிக்கெட் என போட்டிகள் வரிசை கட்டி நின்றாலும் அவை அனைத்திலும் சிறப்புக்குரியது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிதான்.
இந்த முறை உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்துகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கிய உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. அரை இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பழி தீர்த்த இந்தியா அடுத்து இறுதி போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி கோப்பையை முத்தமிடும் வெறியுடன் உள்ளது.
இந்த இறுதி போட்டியானது குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை பிற்பகல் நடக்க இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள சிறியவர் ,இளைஞர், முதியவர்கள், பெண்கள் இளம்பெண்கள் என அனைத்து தரப்பினரிடமும் கிரிக்கெட் ஜுரம் தான் தற்போது பரவிக்கொண்டு வருகிறது.
உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் இந்த நேரத்தில் திருச்சியில் 15அடி உயர பிரம்மாண்டமான கிரிக்கெட் உலகக் கோப்பையை வடிவமைத்து அதனை காட்சி படுத்தி இருக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.
திருச்சி மேலப்புலிவார்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சார்பாகALL THE BEST INDIAஎன்கிற பேனருடன் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற வாழ்த்தி இந்த பேனர் நிறுவப்பட்டுள்ளது.
11 பேர் கொண்ட குழுவினர் 11மணி நேரம் உழைத்து இதை தயாரித்தனர். இவர்கள் இது மாதிரியான பிரம்மாண்டமான உலகக் கோப்பை வைத்து வாழ்த்து தெரிவிப்பது இத்துடன் 3 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu