Drink for Diabetes சர்க்கரை நோயாளியா? கோடையில் கவலையின்றி இதையெல்லாம் குடிங்க!

Drink for Diabetes  சர்க்கரை நோயாளியா? கோடையில் கவலையின்றி இதையெல்லாம் குடிங்க!
X
வெப்பத்தைத் தணிக்க நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான மாற்றுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படியான மாற்று பானங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

அடிக்குற வெயில்ல எதை எதை குடிக்கலாமோ என்றிருக்கிறது. ஆனால் சர்க்கரை நோய் வேற பயமுறுத்துகிறது, பழச்சாறு குடித்தாலும் சுகர் லெவல் அதிகமாகிறது என மருத்துவர் திட்டுகிறாரே. என்ன செய்வது என கவலை கொள்கிறீர்களா? கோடையில் நீங்கள் கவலையின்றி உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொண்டு ஷூகர் லெவலையும் கண்ட்ரோலில் வைக்க உதவும் அட்டகாசமான 5 பானங்கள் பற்றி தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக கலோரி, இனிப்பு நிறைந்த பானங்களை குடிக்க மருத்துவர்களோ, வீட்டில் இருப்பவர்களோ அனுமதிக்கவே மாட்டார்கள். மற்ற நேரங்களில் பரவாயில்லை வெயில் மண்டையைப் பிளக்கும் சமயங்களில் ஏதாவது தொண்டைக்கு இதமாக குடித்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்போம். ஆனால் அப்போதும்கூட பிரஷ் ஜூஸ் போன்றவற்றில் சர்க்கரை அளவு கூடுவதால் பிரச்னை ஏற்படுகிறது.

வெப்பத்தைத் தணிக்க நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான மாற்றுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படியான மாற்று பானங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

தண்ணீர் அது நம் உயிர் நீர்


கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நாம் அருந்தவேண்டிய முதல் பானம் தண்ணீர் தான். உடலிலுள்ள அதிகப்படியான குளுக்கோஸை வெளியேற்றி உடலை சமனாக வைத்திருக்க தண்ணீர் உதவுகிறது. போதுமான அளவு தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தாலே போதும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும். ஒரு நாளைக்கு உங்கள் உடலுக்குத் தேவையான நீரை சரியான அளவு குடித்து வந்தால் உங்களின் சர்க்கரை அளவு சமனாக இருக்கும். மற்ற குளிர்பானங்களைக் குடிப்பதை விட இது பாதுகாப்பானது.

எலுமிச்சை பானம் மறைந்திடும் தாகம்


கோடையில் எலுமிச்சையை விட சிறந்த பானம் எதுவும் இருக்குமா தெரியாது. வெறும் எலுமிச்சை பழத்தை வெட்டிப் பிழிந்து அதில் உப்பு போட்டு குடித்தாலே தாகம் அடங்கும். எலுமிச்சைப் பழத்தைச் சாறு எடுத்து பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது தவிர உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை கொண்டவர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு கோப்பை எலுமிச்சைச்சாறு அருந்தலாம். மேலும் எலுமிச்சையானது வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும்.

ஜூஸ் குடிங்க ஆரோக்யமா இருங்க..!


அது என்னங்க.. ஜூஸ் குடிச்சா சர்க்கரை அளவு ஏறாதா என்று கேட்பது புரிகிறது. பழச்சாறு பருகினால் நீங்கள் நினைப்பது நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் காய்கறிகளில் அந்த அளவுக்கு சர்க்கரை அளவு ஏறாது. இதனால் உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை ஜூஸ் செய்து குடிக்கலாம்.

தக்காளி வைத்து தயாரிக்கும் காய்கறி சாறு நம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. தக்காளி சாற்றில் உள்ள லைக்கோபீன் என்ற சத்து புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க பயன்படுகிறது. இதுவே நீங்கள் பீட்ரூட் ஜூஸ் எடுத்துக் கொண்டால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். இதுபோல வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாப்பிடலாம்.

தேங்காய் தண்ணீர் அல்லது இளநீர்


இளநீர் விற்கும் விலையில் இதை எப்படி வாங்கி பருகுவது என பலரும் நினைப்பதுண்டு, சிலருக்கு இளநீர் குடித்தால் சர்க்கரை அளவு கூடுமா என்ற சந்தேகமும் இருக்கும்.

நிச்சயமாக குறிப்பிட்ட அளவு நீங்கள் குடிக்க முடியும். அதாவது 250 மிலி அளவுக்கு ஒரு நாளைக்கு 2 முறை குடிக்கலாம். பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. இளநீரை வேறு பொருட்களுடன் சேர்க்காமல் அதன் இயற்கை வடிவத்திலேயே குடிப்பதுதான் நல்லது. சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் சோடியம் பொட்டாசியம் இளநீரில் இருக்கின்றது.

மோர்


வேறு எதுவும் வேண்டாம். மோர் குடியுங்கள். இதனால் எந்த பிரச்னையும் ஏற்படப் போவதில்லை. மோரில் வைட்டமின் பி காம்ப்ளர்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. அதில் வைட்டமின் பி உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் பயன்படுகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம். அத்துடன் வெயிலுக்கு ஏற்ப உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!