நவகிரகங்கள் தம்பதி சமேதராக காட்சியளிக்கும் சித்தி விநாயகர் திருக்கோயில்

நவகிரகங்கள் தத்தம் தேவியருடன் தம்பதி சமேதராக காட்சியளிக்கும் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்
இரண்டு அடுக்கு மாடி... ஒடிந்த தந்தத்துடன் காட்சி...!! அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்...!!
இன்று அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் என்னும் ஊரில் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரியிலிருந்து சுமார் 39 கி.மீ தொலைவில் பாகலூர் என்னும் ஊர் உள்ளது. பாகலூரில் உள்ள எ.பி.எல் வளாகத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயிலில் மூலவரான விநாயகர் சிவனின் ஆவுடை மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும், இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை (வடகிழக்கு) நோக்கி காட்சியளிக்கிறார். இத்திருக்கோயிலில் நவகிரகங்கள் அனைத்தும் தத்தம் தேவியருடன் தம்பதி சமேதராக காட்சியளிக்கின்றனர்.
இத்தலத்தின் சுற்றுப்பிரகாரத்தில் தண்டாயுதபாணியும் அவருக்கு இருபுறத்திலும் பாலமுருகனும், திருச்செந்தூர் முருகனும் காணப்படுவது சிறப்பு. அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயிலின் கீழ்தளத்தில் யாகசாலையும், தியானமண்டபமும் அமைந்து காணப்படுவது சிறப்பு. இத்திருக்கோயிலில் விநாயகரின் வலதுபுறத்தில் தாய் சொர்ணாம்பிகையும் அவளது இருபுறமும் மீனாட்சியும், விசாலாட்சியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் பிற கோயில்களை போல அல்லாமல் இரண்டு அடுக்கு மாடியுடன் காணப்படுவது தனிச்சிறப்பு. சித்திரை மூல நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் நடைபெறும். விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. தீபாவளி, மார்கழி பள்ளியெழுச்சி, தை பொங்கல், தை அமாவாசை போன்ற தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றது.
இத்திருக்கோயிலில் எந்த கிரகத்தின் தோஷமாக இருந்தாலும் தோஷ நிவர்த்தி பூஜை செய்யலாம். விநாயகர் சதுர்த்தியன்று பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுக்கின்றனர்.
கடன் சுமை அதிகமாக உள்ளவர்கள் ஒரு வளர்பிறை சதுர்த்தியன்று தேங்காய் எண்ணெயில் 12 விளக்கேற்றி, பின் ஒவ்வொரு சதுர்த்தியிலும் ஒவ்வொரு விளக்காக குறைத்து தீபமேற்றுவதால் விளக்கின் எண்ணிக்கை குறைவது போல கடன் சுமையும் குறையும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் வேண்டியவை நிறைவேறியவுடன் மூலவருக்கு அபிஷேகம் செய்து அருகம்புல் மாலை சாற்றலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu