திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் பிரமோற்சவ விழா தொடக்கம்

திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் பிரமோற்சவ விழா தொடக்கம்
X

குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் (கோப்பு படம்)

திருச்சி அருகே உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் பிரமோற்சவ விழா தொடங்கி உள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ உற்சவம் இன்று( ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. முதல் நிகழ்வாக இன்று இரவு 7:15 மணிக்கு புண்யாக வசனம் மற்றும் அங்குரார் பணம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது. 2-வது நாள் நிகழ்வாக நாளை(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு புண்யாக வசனம், பேரீ தாடனம் நடக்கிறது. மேலும் இரவு 7.30 மணிக்கு ஸ்வர்ண கம்ச வாகன சேவை மற்றும் கண்ணாடி அறை சேவை நடக்கிறது.

வருகிற 19ம் தேதி ஸ்வர்ண சிம்க வாகன சேவையும், 20ம் தேதி அனுமந்த வாகன சேவையும், 21ம் தேதி கருட சேவையும், 22 ம் தேதி சேஷ வாகன சேவையும், 23ம் தேதி கஜ வாகன சேவையும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவ விழா வருகிற 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)மாலை 6:30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக மாலை 6 மணிக்கு ஸ்ரீ பெருமாள் உபய நாச்சியாருடன் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளுகிறார். பின்னர் திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு திருவாராதனம், நெல் அளவை ஆகிய நிகழ்ச்சிகளும், இரவு 9:30 மணிக்கு புஷ்ப விமான புறப்பாடும், தீபாராதனையும் நடைபெறுகிறது. பின்னர் 25ம் தேதி அஸ்வ வாகன சேவை நடக்கிறது.

வருகிற 26ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதை யடுத்து காலை 5 மணிக்கு திருவாராதன நிகழ்வும்,காலை 5.30 மணிக்கு ஸ்ரீ பெருமாள் உபய நாச்சியாருடன் தேர்தட்டில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் சரியாக காலை 8.30 மணிக்கு திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கிறார்கள். விழாவில் அரசு உயர் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். அதன் பின்னர் மாலை 4:30 மணிக்கு காவேரி தீரம் எழுந்தருளல், 5 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், 5.30 மணிக்கு தீர்த்தவாரி, மாலை 6.30 மணிக்கு ஏகாந்த மண்டப கும்ப தீபாராதனை, 6. 45 மணிக்கு பரம்பரை டிரஸ்டிகள் மரியாதை செய்யும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

மேலும் வருகிற 27 ம் தேதி இரவு 8:30 மணிக்கு உத்வாசன பிரபந்தம் சமர்ப்பித்தல் நிகழ்ச்சியும், 28ம் தேதி இரவு 9:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு புறப்பாடு, இரவு 10மணிக்கு ஏகாந்த மண்டப கும்ப தீபாராதனை, இரவு 10.30 மணிக்கு கண்ணாடி அறை சேவை ஆகியவையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை சஷ்டிகள் சார்பில் கே ஆர்.பிச்சுமணி ஐயங்கார் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business