திருச்சி காவிரி கரையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகல கொண்டாட்டம்

திருச்சி காவிரி கரையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகல கொண்டாட்டம்
X

திருச்சி காவிரி கரை அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு பூஜை நடத்திய புது மண தம்பதியினர் மற்றும் பக்தர்கள்.

திருச்சி காவிரி கரையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திருச்சி காவிரி கரையில் ஆடிப்பெருக்கு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆடி 18 ஆடிப்பெருக்கு விழாவாக காவிரி கரையோர மாவட்டங்களில் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது தொன்று தொட்டு தமிழர் மரபில் இருந்து வருகிறது.

சோழ மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் பழமை மாறாமல் கொண்டாடப்படுவது தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகிறது. அந்த வகையில் ஆடிப்பெருக்கு நாளான இன்று திருச்சி ஸ்ரீரங்கம் காவிரிக்கரை அம்மா மண்டப படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி புதுமண தம்பதிகள் திருமணத்தின் போது அணிந்திருந்த பட்டு சேலை மற்றும் பட்டு வேஷ்டி அணிந்து மங்களகரமாக காவிரி கரை அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்து காவிரித்தாயை வணங்கினார்கள். திருமணத்தின் போது அணிந்திருந்த மலர் மாலைகளை வாழை இலையில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர். காவிரி அன்னைக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.


சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைத்து நிற்பதற்காக காவிரி ஆற்றின் படித்துறையில் மாவிளக்கு, அரிசி, தேங்காய் பழம் வைத்து கற்பூரம் ஏற்றி காவிரி தாயை வழிபட்டனர். கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டி காவிரித்தாயிடம் பூஜை செய்து வரம் கேட்டனர். மேலும் புதுமண தம்பதிகள் தாலி பிரித்து புது தாலி அணிந்து கொண்டனர்.

சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டனர். அந்த வகையில் இன்று திருச்சி அம்மா மண்டபம் காவிரி படித்துறை கோலாகலமாக காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் பட்டுப் புடவைகள் சரசரக்க சுமங்கலிப் பெண்களின் காட்சியாக இருந்தது.

காவிரி ஆற்றில் தண்ணீர் தற்போது அதிக இழுப்பு சக்தியுடன் செல்வதால் அம்மா மண்டபம் படித்துறையில் ஆற்றில் இறங்கி யாரையும் குளிக்க விடவில்லை. படித்துறையின் அருகே அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் புனித நீராடுவதற்கு போலீசார் அனுமதித்தனர். மேலும் ரப்பர் படகுகளுடன் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் காவிரி ஆற்றின் நடுவில் இருந்து கொண்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.



அம்மா மண்டபம் படித்துறை மட்டும் இன்றி சிந்தாமணி படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, தில்லைவிளாகம் படித்துறை ஆகிய இடங்களிலும் பக்தர்கள் புனித நீராடினார்கள். இதேபோல காவிரி கரையோர பகுதிகளான ஜீயபுரம், அல்லூர், முக்கொம்பு, முசிறி ஆகிய இடங்களிலும் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இது மட்டும் இன்றி கல்லணை மூலம் பாசன வசதி பெறும் டெல்டா மாவட்டங்களிலும் காவிரி கரையோர கிராம மக்கள் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தனர்.

Tags

Next Story