அயோத்தி ராமர் சிலையை தொடுவதா? மோடிக்கு எதிராக பூரி சங்கராச்சாரியார்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிரதமர் மோடியால் கோவில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி எடுத்து வருவதற்கு பூரி சங்கராச்சாரியாரான சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அயோத்தி கும்பாபிஷேகத்துக்கு செல்ல மாட்டேன் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கியது. கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்றது. சுமார் 70 ஏக்கர் நிலத்தில் பிரமாண்டமாக ராமர் கோவில் அமைய உள்ளது. 3 அடுக்குகளாக நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 161 அடி உயரத்தில் கோவில் கட்டும் பணி நடந்தது.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி கொண்டு வரப்பட்ட கற்கள் உதவியுடன் கோவில் கட்டப்பட்டது. தற்போது முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அயோத்தி ராமர் கோவில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். மேலும் கும்பாபிஷேக தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கோவில் கருவறையில் நிறுவப்பட உள்ள 5 வயது குழந்தை வடிவ சிலையை எடுத்து வந்து வழங்க உள்ளதாகவும், அதன்பிறகு கோவிலில் அந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தான் கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடி ராமர் சிலையை தொட்டு எடுத்து வருவதற்கு பூரி மடத்தின் சங்கராச்சாரியான சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வேண்டி அழைப்பிதழ் கிடைத்துள்ளது. அதில் ஒருவருடன் விழாவுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் பங்கேற்க போவது இல்லை.
பிரதமர் கடவுள் சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்யும்போது நான் அங்கு நின்று கைகளை தட்டி கொண்டாட வேண்டுமா? இது கலாசாரத்துக்கு எதிரானது. ராமர் சிலையை பிரதமர் மோடி தொடுவது என்பது கண்ணியத்துக்கு எதிரானது. இதனால் நான் அங்கு செல்லப்போவது இல்லை. ராமர் சிலை பிரதிஷ்டையில் கண்ணியம் மீறப்படுவதை என்னால் பார்க்க முடியாது. நான் அதனை பார்க்க விரும்பவில்லை. மேலும் ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை என்பது சாஸ்திரப்படி நடக்க வேண்டும். ராமர் கோவில் விஷயத்தில் நடத்தப்படும் அரசியல் தொடர கூடாது. தற்போதைய சூழலில் மத வழிபாட்டு தலங்கள் என்பது சுற்றுலாத்தலமாக மாற்றப்படுகின்றன. இது ஆடம்பர விஷயங்களை அங்கு சேர்க்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் என்பது சரியானது அல்ல.'' என காட்டமாக கூறியுள்ளார்.
நாட்டின் பிரதமருக்கே எதிராக சங்கராச்சாரியார் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu