ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோயில்களில் நாளை நடையடைப்பு
வானில் நிலவும் அரிய நிகழ்வுகளான சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவையும் அவ்வப்போது நடப்பது உண்டு.பொதுவாக கிரகண நேரத்தில் பூமியில் வாழும் நாம் சில சம்பிரதாயங்களை கடைபிடிக்க வேண்டியது உள்ளது. சில நேரங்களில் அதற்காக பரிகாரங்களும் செய்யவேண்டிய நிலை ஏற்படும்.
அந்த வகையில் நாளை மாலை முதல் இரவு வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணம் இந்தியா முழுவதும் நன்றாக தெரியும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கிரகணம் நடைபெறும் நேரத்தில் ஆலயங்களில் நடை சாத்தப்பட்டு சுவாமிகளை வழிபாடு செய்யக்கூடாது என்பது ஐதீகமாகும். கிரகணம் முடிந்த பின்னர் அதற்கான பரிகார பூஜை செய்த பின்னர் தான் நடை திறந்து பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் சந்திர கிரகணத்தின்போது நடைசாத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி நாளை அக்டோபர் 28ம் தேதி மாலை 5.30மணிக்கு பின்னர் அனைத்து சன்னதிகளிலும் நடைசாத்தப்படும், பக்தர்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி இல்லை எனவும், மறு நாள் 29ந்தேதி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதே போல் தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானதாகவும், சிறந்த பரிகார ஸ்தலமாகவும் கருதப்படும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் நாளைய தினம் அக்டோபர் 28ந்தேதி சந்திரகிரகணத்தையொட்டி பிற்பகல் 3 மணிக்கு விளக்கு பூஜையும், அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜையும் முடித்த பின்னர் மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படும் மறு நாள் 29ந்தேதி காலை 5.30 மணிக்கு வழக்கம் போல் நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu