இன்று பெயர்ச்சியாகும் குருபகவான் : குருவின் பார்வை பலன் பெறும் ராசிகள்

இன்று பெயர்ச்சியாகும் குருபகவான் : குருவின் பார்வை பலன் பெறும் ராசிகள்
X
இன்று குருபெயர்ச்சி-ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சிகள் என்பது மிகவும் முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது.

ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சிகள் என்பது மிகவும் முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் முழுசுபர் என அழைக்கப்படக்கூடிய குருபகவானின் பெயர்ச்சி மற்ற கிரக பெயர்ச்சிகளை விட மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.முழுசுபரான குருபகவான், ஒரு ஆண்டு வரை ஒரு ராசியில் சஞ்சாரம் செய்து பலன் அளிக்கக்கூடியவர் ஆவார். அவ்வாறு இருக்கும் ஒரு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் அதிசாரமாக தான் இருக்கக்கூடிய ராசியிலிருந்து முன் உள்ள ராசிக்கு சஞ்சரித்து பின் வக்ர நிலையில் பழைய இடத்திற்கே திரும்புவார்.

பொதுவாக நவகிரகங்களில் சூரியன் மற்றும் சந்திரனை தவிர மற்ற அனைத்து கிரகங்களும் அவ்வப்போது அதிசார வக்ர நிலையினால் முன்னும், பின்னும் செல்ல வேண்டிய நிலை உண்டாகும். அந்த வகையில் தன்னைவிட அதிக ஈர்ப்பு விசை கொண்ட செவ்வாயை கடந்து செல்லும்போது ஈர்ப்பு விசையில் இருந்து காத்துக்கொள்ள குருபகவான் சாதாரணமாக நகரும் வேகத்தை விட 6 மடங்கு தனது வேகத்தை அதிகரித்து நகர தொடங்குவார். இதைதான் அதிசார குருபெயர்ச்சி என்று சொல்லப்படுகிறது.

2022ல் அதிசாரமா? குருபெயர்ச்சியா?

குருபகவானின் அதிசார பெயர்ச்சி 2022 ஆம் ஆண்டு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பொதுவாக குருபகவான் ஓரிரு மாதங்கள் அதிசாரமாக தான் இருக்கும் ராசியிலிருந்து, அடுத்த ராசிக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை வரும் ஏப்ரல் 13ஆம் தேதியான இன்று குரு, கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாக உள்ளார்.

ஒருவரின் ஜாதக பலனை பார்க்கும்போது குரு அமர்ந்திருக்கும் இடம், குருவின் பார்வை பலன் பார்க்க வேண்டியது மிக முக்கியமானது. முழு சுபரான குருபகவான் கும்ப ராசிக்கு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி (ஐப்பசி 27ஆம் தேதி), திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நவம்பர் 20ஆம் தேதி (கார்த்திகை மாதம் 4ஆம் தேதி) அன்று பெயர்ச்சியானார்.

2021ல் நடந்த குருபெயர்ச்சி மற்ற குருபெயர்ச்சியை விட குறைந்த காலம் அதாவது 5 மாதங்கள் வரை மட்டுமே குரு கும்ப ராசியில் சஞ்சரிப்பார். அதாவது 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி ( பங்குனி 30ஆம் தேதி) வரை குரு கும்ப ராசியில் சஞ்சாரம் செய்வார். அதன்பின் அதிசாரமாக குருபகவானின் சொந்த ராசியான மீன ராசிக்கு செல்கிறார்.

2022 ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 2023 ஏப்ரல் 22ஆம் தேதி வரை மீனத்தில் இருப்பார். அதன்பின்னர் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆவார். அதனால் இதனை குரு அதிசார பெயர்ச்சி என கூறுவதற்கு பதிலாக, குருபெயர்ச்சி என்றே கூறும் அளவில் நீண்ட காலம் மீனத்தில் குரு சஞ்சரிக்க உள்ளார்.

இந்த குருபெயர்ச்சியால் எந்தெந்த ராசிகள் பலம் பெறுகின்றன?

குருதேவர் தான் நின்ற இடத்தை காட்டிலும் தான் பார்க்கின்ற இடத்திற்கு அதிக சுபச்செயல்களை செய்யக்கூடியவர். குருதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து 5, 7 மற்றும் 9 ஆகிய ராசிகளை பார்வையிடுகிறார்.

தன்னுடைய ஆட்சி வீடான மீன ராசியில் இருந்து குருதேவர் ஐந்தாவது பார்வையாக கடக ராசியையும் ஏழாவது பார்வையாக கன்னி ராசியையும் ஒன்பதாம் பார்வையாக விருச்சிக ராசியையும் இந்த வருடம் முழுவதும் பார்வையிட இருக்கின்றார்.

இந்த மூன்று ராசிகளுக்கும் இந்த வருடம் சுபச்செயல்கள் தொடர்பான காரியங்கள் அவரவர்களின் ஜென்ம ஜாதகங்களில் நடைபெறும் திசாபுத்திகளுக்கு ஏற்ப கைகூடி நல்ல பலனை அளிக்கும்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!