அவிநாசி; கோலாகலமாக நடந்த அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம்

அவிநாசி; கோலாகலமாக நடந்த அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம்
X

Tirupur News. Tirupur News Today- அவிநாசியில், நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவில், பக்தர் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த அழகு தேர்.

அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற கோலாகலமான விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது.

Tirupur News. Tirupur News Today- அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் ஏழாகும். அதில் முதலாவதாக விளங்குகிற திருத்தலம் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலாகும். ஒவ்வொரு ஆண்டும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா சித்திரை மாதத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதே போல் இந்த ஆண்டு சித்திரை மாத தேர்த்திருவிழா கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன்பின்னர் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அந்த வகையில், கடந்த மாதம் 26-ம் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகள், 27-ம் தேதி பூத வாகன, அன்னவாகன அதிகாரநந்தி, கிளிவாகன காட்சிகள் நடைபெற்றது. 28-ம் தேதி புஷ்ப விமானம், கைலாச வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். 29-ம் தேதி இரவு 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது 30-ம் தேதி கற்பக விருட்சமும், திருக்கல்யாண உற்சவமும், உற்சவ மூர்த்திக்கும் கருணாம்பிகை அம்மனுக்கும் ஊஞ்சல் விழாவும் நடந்தது. கோவில் அர்ச்சகர் திருமாங்கல்ய பூஜை செய்து கல்யாண உற்சவத்தை நடத்திவைத்தார். அப்போது பெங்களூரு வேத ஆகம பாடசாலை முதல்வர் சந்திர மூர்த்தி சிவம் தலைமையில் மாணவர்கள் வேத மந்திரம் மற்றும் திருமுறைகள் பாடினர். இதை தொடர்ந்து யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது.

நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தது. விநாயகப் பெருமான், அவிநசியப்பர், கரிவரதராஜப்பெருமாள் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை 6 மணியளவில் சிறப்பு நாதஸ்வர இன்னிசை உடன் உற்சவ மூர்த்திகள், அலங்கரித்து வைக்கப்படிருந்த பெரிய தேருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது, அதிர் வேட்டுகள் முழங்க நாதஸ்வர இசை, பஞ்ச வாத்தியங்கள் ஒலிக்க சுவாமிகள் ரதத்தின் மீது அமர்த்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து பெரிய தேரில் வீற்றிருக்கும் சோமஸ்கந்தர், உமாமகேஸ்வரி, சிறிய தேரில் வீற்றிருக்கும் கருணாம்பிகை அம்மன் ஆகிய தெய்வங்களை காலை 6.30 மணிமுதல் இரவு 10.30மணிவரை அக்னி வெயிலையும் பொருட்படுத்தாது பக்தர்கள் இடைவிடாது ரதத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்

நேற்று ரதத்தின் மீதிருந்த உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் தீபாதாரனை நடந்தது. பின்னர் அதிர் வேட்டுகள் முழங்க காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரின் இரண்டு பின் சக்கரங்களிலும் ராயம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் ஜன்னை மிராசுகள் ஜன்னை போட்டு தேரை நகர்த்தி கொடுத்தனர். ஆன்மிக சான்றோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்தடன் சிவ சிவ என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு பின்னால் நிறுத்தப்படிருந்த கிரேன் தேரை தள்ளியது. மிக அழகான தேர் அசைந்தாடி நகர்ந்தது. அப்போது பக்தர்கள் கைதட்டி கோஷம் எழுப்பினர். பின்னர் நிலையிலிருந்து சிறிது தூரம் தேர் இழுத்து நிறுத்தப்பட்டது.

தேரோட்டத்தில் கோவை மற்றும் அவிநாசி, திருப்பூர் மற்றும் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேைர வடம் பிடித்து இழுத்தனர். தேர்த்திருவிழாவை முன்னிட்டு நான்கு ரதவீதிகளில் உள்ள மண்டபங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு அவிநாசி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது.

தேரோட்டம் காரணமாக அவிநாசியில் எங்குபார்த்தாலும் பக்தர்கள் கூட்டமே காணப்பட்டது. மீண்டும் இன்று (புதன்கிழமை) 2-வது நாள் தேரோட்டம் நடக்கிறது. மாலையில் தேர் நிலை சேர உள்ளது. நாளை (வியாழக்கிழமை) தேதி அம்மன் தேர் இழுக்கப்படுகிறது. 5-ம் தேதி வண்டித்தாரை, பரிவேட்டை நிகழ்ச்சியும், 6-ம் தேதி தெப்பத்தேர்விழா, 7-ம் தேதி நடராஜர் தரிசனமும் நடக்கிறது 8-ம் தேதி காலை மணிக்கு மஞ்சள் நீர் விழாவும் அன்று இரவு மயில் வாகன காட்சியும் நடக்கிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!