திருப்பதி திருமலையில் அக். 15 ல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்
திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையான் கோவிலை பொறுத்த வரை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோல் ஒரே ஆண்டில் இரண்டு முறை பிரம்மோற்சவங்கள் நடைபெறும். இந்த நிலையில் பிரம்மோற்சவத்தை சிறப்பாக நடத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கட்ரமணா ரெட்டி, காவல் கண்காணிப்பாளர் பரமேஸ்வர ரெட்டி மற்றும் தேவஸ்தானத்தில் உள்ள பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது:-
பிரம்மோற்சவத்திற்கான அங்குரர்ப்பணம் அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 9 நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும். வருடாந்திர பிரம்மோற்சவத்தில் நடைபெறும் கொடியேற்றம், கொடி இறக்கம், திருத்தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் நடைபெறாது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளான கருட வாகன புறப்பாடு அக்டோபர் 19 ஆம் தேதியும், புஷ்பக விமான புறப்பாடு அக்டோபர் 20 ஆம் தேதியும், தங்கத் தேரோட்டம் 22 ஆம் தேதியும், சக்கர ஸ்நானம் 23 ஆம் தேதியும் நடைபெறும். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதிற்கு உள்ளிட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் முன்னுரிமை தரிசனம் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கல்யாண உற்சவம் உள்ளிட்ட கட்டண சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கருட வாகன புறப்பாடு நடைபெறும். அக்டோபர் 19 ஆம் தேதி திருப்பதி மலை பாதைகளில் மோட்டார் சைக்கிள்களில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று தர்மா ரெட்டி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu