அதிகளவில் திருமணங்கள் நடைபெறும் திருநெல்வேலி சாலைக்குமாரசுவாமி கோவில்

அதிகளவில் திருமணங்கள் நடைபெறும் திருநெல்வேலி சாலைக்குமாரசுவாமி கோவில்
X
சாலைக்குமரன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் கம்பீரமாகக் காட்சிதருகிறார். இவருக்குச் சந்தன காப்பு செய்வது இங்கு விசேஷ வழிபாடாகக் கருதப்படுகிறது

முகூர்த்த நாட்களில் அதிகளவில் திருமணங்கள் நடைபெறும் சாலைக்குமார சுவாமி கோவில் வரலாறு

முன்னொரு காலத்தில் திருநெல்வேலியில் தற்போது இந்தக் கோவில் அமையப்பெற்றிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள குறுக்குத்துறை என்னும் பகுதியில் சிலைகள் வடிக்கும் சிற்பக்கலைஞர்கள் மிகுதியாக வாழ்ந்து வந்தார்களாம். இங்கிருந்து தான் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவில்களுக்குத் தேவையான சிலைகள் புதிதாகச் செய்யப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் கடல் வழியாகத் திருச்செந்தூருக்கு வந்த டச்சுக்காரர்கள், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த சண்முகர் மற்றும் நடராஜர் விக்கிரகங்களை கொள்ளையடித்து சென்று விடுகின்றனர். சண்முகர் மற்றும் நடராஜர் விக்கிரகங்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டதால் கோவிலில் நடைபெறும் உற்சவங்கள் தடைபட்டுள்ளது. இதனால் வடமலையப்ப பிள்ளை என்னும் செல்வந்தர், திருச்செந்தூர் கோவிலுக்குப் புதிதாக சண்முகர் விக்கிரகம் செய்ய முடிவெடுத்து, குறுக்குத்துறையில் வாழ்ந்த சிற்பிகளிடம் புது விக்கிரகம் செய்து தர வேண்டுகிறார். அவர்களும் வடமலையப்ப பிள்ளை வேண்டிக்கேட்ட படி, புது விக்கிரகங்கள் செய்ய ஆரம்பித்தனர்.


சுமார் மூன்று மாத இடைவெளியில் புதிய விக்கிரகத்தைச் செய்து முடித்த சிற்பிகள் அதனை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து திருச்செந்தூர் நோக்கிப் புறப்படுகின்றனர். புறப்பட்டு வரும் வழியில் இரவு நேரம் ஆகிவிடவே தற்போது சாலைக்குமரன் கோவில் அமைந்துள்ள பகுதியில் இரவு பொழுதைக் கழிக்கும் பொருட்டு தங்கிவிடுகின்றனர். இதற்குள் அன்று இரவில் வடமலையப்பப்பிள்ளையின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், டச்சுக்காரர்கள் கடத்தி கொண்டு சென்ற விக்கிரகங்கள் கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கின்றது என்றும், அதனை மீட்டு கொண்டு வரும் படியும் கூறியருள்கிறார்.

அவ்வாறே வடமலையப்ப பிள்ளையும் முருகப்பெருமான் அடையாளம் கூறிய இடத்திற்கு ஆட்களுடன் சென்று தேட, கடலுக்குள் மூழ்கிக் கிடந்த சண்முகர் மற்றும் நடராஜர் விக்கிரகங்கள் மீட்டெடுக்கப்பட்டு திருச்செந்தூர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இந்நிலையில் புதிதாகச் செய்யப்பட்ட சண்முகர் விக்கிரகத்தோடு இரவு பொழுதை கழிப்பதற்காகத் தங்கிய சிற்பிகள் மறுநாள் காலை அந்த இடத்தில் இருந்து புறப்படத் தயாராக, சண்முகர் விக்கிரகம் இருந்த மாட்டு வண்டி அங்கிருந்து ஒரு அடி கூட நகரவில்லையாம்.

"எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அங்கிருந்து மாட்டு வண்டியை நகர்த்த முடியாததால், செய்வதறியாது நின்றிருந்த சிற்பிகளிடம், திருச்செந்தூரில் காணாமல் போன சண்முகர் மற்றும் நடராஜர் விக்கிரகங்கள் கிடைத்துவிட்டது என்ற தகவல் தெரிவிக்கப் படுகிறது. அப்போதும் அங்கிருந்து மாட்டு வண்டி ஒரு அடி கூட அசையாமல் நிற்கவே, அதனை தெய்வத்தின் திருவிளையாடலாகக் கருதி அந்த இடத்திலேயே கோவில் கட்டி சண்முகரை பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்து , கோவிலும் கட்டி திருச்செந்தூர் கோவிலுக்காகப் புதிதாக உருவாக்கப்பட்ட சண்முகரை அங்குப் பிரதிஷ்டை செய்து விடுகிறார்கள். பின்னர் அந்தக் கோவிலில் மயில் மீது அமர்ந்த நிலையில் உள்ள ஒரு முருகன் கல் விக்கிரகத்தையும் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள் என்றும் அதுவே தற்போது உள்ள பாளையஞ்சாலைக்குமார சுவாமி திருக்கோவில் என்றும் இந்தக் கோவிலின் வரலாறு கூறப்படுகிறது.

கிழக்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ள இந்தத் திருக்கோவிலின் பிரதான வாயிலாகச் சண்முகருக்கு எதிராக உள்ள வாசலே பயன்படுத்தப் படுகிறது. கிழக்குக்கு திசையில் இருக்கும் வாசல் பெரும்பாலும் பூட்டியே இருக்கிறது. தெற்கு வாசல் வழியே உள்ளே நுழைந்தால் முன்மண்டபத்தில் சித்தி விநாயகரும், உற்சவ மூர்த்திகளான விநாயகர் மற்றும் வள்ளி – தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரும் தனித்தனி சந்நிதிகளில் காட்சித் தருகிறார்கள். அவர்களை வணங்கி உள்ளே சென்றால் கிழக்கு திசை நோக்கிய கருவறையில் ஸ்ரீ சாலைக்குமார சுவாமி மயில் மீது அமர்ந்த கோலத்தில் ஆறுமுகங்கள் மற்றும் பன்னிரண்டு கரங்களுடன் காட்சித்தருகிறார். அவருக்கு அருகில் ஒருபுறம் வள்ளியம்மையும், மறுபுறம் தெய்வானை அம்மையும் காட்சி தருகிறார்கள். தெற்கு திசை நோக்கிய தனி சந்நிதியில் வள்ளி – தெய்வானை அம்மைகளுடன் கூடிய சண்முகர் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாகச் சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் ஆகியோர் காட்சித்தருகிறார்கள். சுவாமி சாலைக்குமாரசாமி கருவறைக்கு எதிரே பெரிய முன் மண்டபம் உள்ளது.

இங்குள்ள கருவறை மூர்த்தியான சாலைக்குமரன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் கம்பீரமாகக் காட்சிதருகிறார். இவருக்குச் சந்தன காப்பு செய்வது இங்கு விசேஷ வழிபாடாகக் கருதப்படுகிறது. இவருக்குக் காப்பு செய்யப்பட்ட சந்தனங்கள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

முகூர்த்த நாட்களில் இங்கு அதிகளவில் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்தச் சாலைக்குமரன் சந்நிதியில் திருமணம் செய்து கொண்டால் சகல வளங்களும் பெற்று மணமக்கள் பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.அதிகபட்சமாக ஒரே நாளில் 54 திருமணங்கள் வரை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாதம் கந்த சஷ்டி உற்சவம், தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்திரை வருட பிறப்பு, பங்குனி உத்திரம் ஆகிய வருடாந்திர விழாக்கள் இங்குச் சிறப்பாக நடைபெறும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!