நெல்லையில் விநாயகர் தன் தேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தனி ஆலயம்

நெல்லையில் விநாயகர் தன் தேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தனி ஆலயம்
X
மூர்த்தி விநாயகர் என்ற பெயரில் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் தனது மனைவியான நீல சரஸ்வதி தேவியை மடியில் வைத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்

நெல்லை சந்திப்பில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மணிமூர்த்தீஸ்வரம். இங்கு விநாயகப்பெருமானுக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது. தாமிர பரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்து உள்ள இந்தக் கோவிலின் மூலவரான விநாயகப்பெருமான், நீல சரஸ்வதியை தன் மடியில் அமர்த்தி வைத்தப்படி காட்சி தருகிறார். தன்னுடைய 32 தோற்றங்களில் 8–வது வடிவமாக போற்றப்படும் உச்சிஷ்ட கணபதியாக இத்தலத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார்.


800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோவில், ஆசியாவிலேயே ராஜகோபுரத்துடன் தனி மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் ஒரு சில ஆலயங்களில் ஒன்றாகும். 8 நிலை மண்ட பங்கள், 3 பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இந்தக் கோவிலில் சிவலிங்கம், காந்திமதி அம்மன், 16 சோடஷ கணபதிகள், கன்னி மூல கணபதி, வள்ளி–தெய்வானை சமேத சுப்பிரமணியர், சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இந்த ஆலயத்திற்கு ரிஷி தீர்த்தம், ருத்ரபாத தீர்த்தம் என்ற இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. வன்னிமரம், பனைமரம் ஆகிய இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன.

முன்னொரு காலத்தில் வித்யாகரன் என்ற அரக்கன் பிரம்மாவை நினைத்து கடுந்தவம் புரிந்தான். பிரம்மாவும், வித்யாகரனுக்கு காட்சி அளித்து வரம் தருவதாக கூறினார். அப்போது வித்யாகரன், 'என்னைப் போரில் வெல்லக்கூடியவன் மனிதனாகவோ, மிருகமாகவோ இருக்கக்கூடாது. அகோரமானவனாகவும் இருக்கக்கூடாது. தேவ அசுர சபைகளின் முன்பு யாருடைய உதவியும் இல்லாமல் என்னுடன் போரிட வேண்டும். அந்த சமயம் அவன், தனது சக்தியுடன் இணைந்த கோலத்தில் இருக்க வேண்டும்' என தன்னை யாரும் அழிக்க முடியாத ஒரு அரிய வரத்தை கேட்டான்.

பிரம்மாவும் வித்யாகரன் கேட்ட வரத்தை வழங்கினார். வரம் பெற்ற வித்யாகரன், தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற அகங்காரத்துடன் தேவர்கள், முனிவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்தி, அவர்களுக்கு பல்வேறு துன்பங்களைக் கொடுத்தான். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றுகூடி மும்மூர்த்திகளிடம் சரண் அடைந்தனர்.

மும்மூர்த்திகள் ஒன்று சேர்ந்து பராசக்தி மாதாவான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியை மனதில் நினைத்து மிகப்பெரிய யாகத்தினை நடத்தினர். மேலும் வித்யாகரனை அழிக்க விநாயகரை வேண்டினர். விநாயகரும் ஒப்புக்கொண்டு யாகத்தின் முடிவில் யாகத்தீயில் இருந்து அஷ்டமி திதியில் வெளிப்பட்டார். அதேபோல் பிரம்மாவின் ஏற்பாட்டால் பதங்க முனிவர் வேள்வி நடத்த, அதில் இருந்து பிரம்மாவின் மகளாக நீல சரஸ்வதி வெளிப்பட்டாள். விநாயகருக்கு நீல சரஸ்வதி தேவியை நவமி திதியில் திருமணம் செய்து வைத்தனர்.

மும்மூர்த்திகளும் இந்திரனிடம், வித்யாகரனை போருக்கு அழைக்குமாறு கூறினர். வித்யாகரனும் கோபத்துடன் போரிட வந்தான். அவன் கர்ஜனையுடன் வரும்போது உச்சிஷ்ட கணபதி, தனது மனைவியான நீல சரஸ்வதி தேவியை தனது இடது தொடையில் அமர செய்து, தன் இரு கைகளால் அணைத்த வண்ணம் துதிக்கையை தேவியின் மடியில் வைத்து அதே கோலத்துடன் பாசம், அங்குசம் இருக்கும் கைகளில் வில்லும், அம்பும் ஏந்தியபடி இருந்தார். அப்போது விநாயகர் ஒரு கோடி சூரியனுடன் இணைந்து வந்தது போல் ஒளிப் பிரகாசமாக காட்சியளித்தார்.

விநாயகரை பார்த்த வித்யாகரன், அவருடைய ஒளிக்கதிர் வீச்சு தாங்காமல் அவன் நாக்கை அவனே கடித்துக்கொண்டு வலியால் துடித்து இறந்து போனான். அவன் வாங்கிய வரத்தின்படியே அசுரர்கள், தேவர்கள் கூடிய சபையிலே உச்சிஷ்ட கணபதி யாருடைய உதவியும் இல்லாமல், தேவியுடன் இருக்கும்போது போரிடாமல் விநாயகருடைய பார்வையினாலேயே அவனை வதம் செய்தார்.

வித்யாகரன் இறந்ததும் அனைவரும் மகிழ்ந்து விநாயகரை வணங்கினார்கள். முனிவர்கள், விநாயகரிடம் பராசக்தியின் அவதாரமான நீல சரஸ்வதி தேவியை தனது மடியில் இருத்திய கோலத்துடன், பூமியில் தாமிரபரணி நதிக்கரை ஓரம் ரிஷி தீர்த்தக்கட்டம் அருகே வீற்றிருந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார்கள். விநாயகரும் அதற்கு இசைந்து, சூரிய பகவானின் தேரில் ஏறி தாமிரபரணி நதிக்கரையில் மணிமூர்த்தீஸ்வரத்தில் முனிவர்களுக்கு காட்சியளித்து அருளினார்.


சூரிய பகவான், விநாயகரை வணங்கி, 'நான் ஒவ்வொரு சித்திரை மாதமும் முதல் நாள் அன்று தங்கள் மேல் எனது ஒளியை விழச்செய்து வணங்கி ஆசி பெறுவேன். அன்றைய தினம் தங்களை உள்ளன்போடு வழிபடுகின்றவர்களுக்கு, சகல செல்வங்களையும் தந்தருள வேண்டும்' என்று வேண்டினார். உச்சிஷ்ட கணபதியும் அவ்வாறே அருளினார் என்கிறது, இந்த ஆலயத்தின் தல வரலாறு.

உச்சிஷ்ட கணபதி மூலவராக, மூர்த்தி விநாயகர் என்ற பெயரில் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். அவர் தனது மனைவியான நீல சரஸ்வதி தேவியை மடியில் வைத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் சுற்றிலும் கோட்டைச்சுவருடன் கம்பீரமாக அமைந்து உள்ளது இந்தத் திருக்கோவில். கோபுரத்தின் முன்புறமும், பின்புறமும் 16 வகையான விநாயகர் உருவங்கள், அமர்ந்த மற்றும் நின்ற கோலங்களில் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன.

சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவில் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள் உயர்ந்த கொடி மரம், பலி பீடத்துடன் அமைந்துள்ளது. கொடி மண்டபத்திற்கு வடக்கு பக்கம் சொர்ண ஆகர்ஷன பைரவர் சன்னிதியும், அதற்கு முன்பாக பைரவ தீர்த்தம் உள்ள கிணறும் இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

விநாயகர் தன் தேவியுடன் இருந்து அருள்பாலிப்பதால் கணவன்–மனைவி ஒற்றுமை, சந்தோஷம், திருமணத்தடை நீக்குதல், பிரிந்த கணவன்–மனைவி ஒன்று சேர்தல் ஆகிய வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறுகிறது என்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!