செந்தில்நாதரின் அரசாங்கத்தை காண திருச்செந்தூர் வாங்க!

செந்தில்நாதரின் அரசாங்கத்தை காண திருச்செந்தூர் வாங்க!
X
Tiruchendur Temple History in Tamil-திருசீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில் தான் சூரபத்மனை முருகன் வதம் செய்தார்.

Tiruchendur Temple History in Tamil

தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு சிறப்புக்குரிய இடமாக தமிழகத்தில் ஆறு இடங்கள் உள்ளன. அவை ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி,சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகியவை.

திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாகும். இவ்விடம் முன்னர் 'திருச்சீரலைவாய்' என்று அழைக்கப்பட்டதாம் இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை வென்றபின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவில் வைத்து வழிபட்டார். அலைகள் வந்து புரளும் கடற்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.

தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார்.

அப்போது முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி தவமிருந்த தேவர்களின் குருவான வியாழ பகவானுக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்ட முருகப்பெருமான், தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். சூரபத்மனை வதம் செய்த நிகழ்ச்சி இன்றும் சூரசம்ஹாரம் என சிறப்புடன் கொண்டாடப்படுகிறது

நாழிக் கிணற்றுக்கும் சூரசம்ஹாரத்துக்கும் கூட ஒரு தொடர்பு இருக்கிறது. சூரசம்ஹாரம் முடிந்த பிறகு முருகன் தனது கோபத்தைத் தணிக்க தனது வேலால் வேகமாக தரையை குத்த, பீரிட்டு வந்த நீர்தான் நாழிக் கிணற்றில் இருப்பதாக நம்பிக்கை.

சூரபதுமனுடனான போரின் போது திருச்செந்தூரில் முகாமிட்டு தங்கியிருந்த போர் வீரர்கள் தாகத்தை தீர்ப்பதற்காக முருகன் தனது வேலால் இந்த கிணறை உருவாக்கினர் என்றும் கூறப்படுகிறது.

கடல் பரப்பை விட கீழ் இருக்கும் இந்த நாழிக் கிணற்றில் ஊறும் நீர் கடல் மண்ணிணால் வடிகட்டப்பட்டு உவர்ப்பு நீங்கி இனிப்பு சுவையுடன் உருவெடுக்கிறது.

முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வியாழ பகவான் வேண்டிக்கொள்ளவே, முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் 'ஜெயந்திநாதர்" என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே 'செந்தில்நாதர்" என மருவியது. தலமும் 'திருஜெயந்திபுரம்" என அழைக்கப்பெற்று, பின்பு திருச்செந்தூர் என மருவியது.

137 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. இராஜ கோபுரம் கட்டும் காலத்தில் முருகன் பல திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார். உதாரணமாக திருப்பணியை மேற்கொண்ட தேசிக மூர்த்தி சுவாமிகள் வேலையாட்களுக்கு கூலி கொடுக்க பணம் இல்லாமல், முருகனிடம் மனமுருகி வேண்ட, அப்போது முருகன், சுவாமிகளின் கனவில் வந்து வேலையாட்களுக்கு இலை விபூதியை கூலியாகக் கொடுக்குமாறும் அதை கோவிலின் அருகே இருக்கும் விநாயகர் சன்னதியின் முன் திறந்து பார்க்கும்படியும் கூறினார். வேலையாட்கள் அந்த இலை விபூதியை விநாயகர் முன்பு திறந்து பார்த்தால், அவர்களின் உழைப்புக்கு ஏற்ற பணம் இருந்த அதிசயமும் நிகழ்ந்து இருக்கிறது. ஒன்றல்ல இரண்டல்ல பல அதிசயங்களை முருகக்கடவுள் அன்று முதல் இன்று வரை இத்தலத்தில் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

இலங்கை மன்னன் கண்டி அரசன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி, சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் மிதக்க விடச் சொன்னார். அதன்படியே கண்டி அரசன் வெட்டித் தள்ளிய மரம் திருச்செந்தூர் கரையை அடைந்தது. இந்த மரமே கொடிமரமாக உள்ளது. இந்தச் செய்தி திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலும் இடம் பெற்றுள்ளது.

முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபெருமானுக்கு பூஜை செய்தார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் உள்ள லிங்கத்திற்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒருநாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.

முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்துள்ளது.

திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது பக்தர்களின்நம்பிக்கை.

இந்த ஆலயம் ஓம் என்ற பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. கோயில் வடக்கு - தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு - மேற்காக 214 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. கோபுரம், யாளி மண்டபத்துக்கு மேல் 137 அடி உயரமும், 90 அடி நீளமும், 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. இதன் ஒன்பதாவது மாடத்தில் கடிகார மாளிகை இருக்கிறது.

இங்கு மூலவர் தவக்கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே அவர் கையில் வேலும் அருகில் தேவியரும் கிடையாது. செந்திலாண்டவர் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகருக்கு சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்தத் தலத்தை வீரபாகு க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள். அர்த்த மண்டபத்தில் வீரபாகு, வீர மகேந்திரர் காவல் தெய்வங்களாக விளங்குகின்றனர். செந்திலாண்டவனுக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்கு பூஜை செய்து 'பிட்டு' படைத்து வழிபடுகின்றனர்.

கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என அழைக்கப்படுகிறது. இறைவன் சூரிய,சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்குகிறார் என்பதை விளக்குவதற்காகவே அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சந்நிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங்களைக் கண்ணாலும், மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போதுதான் நமது பிரார்த்தனை முற்றுப்பெறும். அஷ்ட லிங்கங்கங்களில், முருகப்பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதிகம்.

மூலவரின் தலைக்கு மேல் பெரிய வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டு, அதில் பால் நிரப்பி, சிறு துவாரத்தின் வழியாக பாலை தாரை தாரையாக மூலவரின் மேல் விழச் செய்து சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் இந்தக் கோயிலின் சிறப்பு.

இரவு சுவாமிக்குத் திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்துத் தீபாராதனை செய்வர். இதை ரகசியத் தீபாராதனை என்கிறார்கள். உலோகத் திருமேனியரான ஆறுமுகப் பெருமானுக்கு ஆண்டுக்கு 36 தடவை மட்டுமே அபிஷேகம் நடை பெறுகிறது. இதில் விபூதி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.

இந்த தலத்தின் சிறப்பம்சம் பன்னீர்இலை விபூதி பிரசாதம். திருச்செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங்களாக உள்ளனர் என்பது ஐதீகம். பன்னிரு நரம்புகள் உள்ள பன்னீர் மர இலைகளில் வைத்துத் தரப்படுவதே இலை விபூதி பிரசாதம். முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்க திருநீறு அளித்ததாக கூறப்படுகிறது. சூரபதுமன் வதம் முடிந்த பின் முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளினால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்றும் கூறுவர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil